தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு நடிகர் என்றால் அது காமெடி நடிகர் விவேக் மட்டுமே. சமூக கருத்துக்கள் நிறைந்த இவரது காமெடி மக்களை சிரிக்கவும், சிந்திக்கவும் வைக்கும். ஒரு நல்ல நடிகர் என்பதை தாண்டி விவேக் ஒரு சிறந்த மனிதர் என்பதற்கு அவர் செய்த சமூக சேவைகளே உதாரணமாகும். விவேக் இந்த மண்ணைவிட்டு பிரிந்தாலும் அவரது காமெடி மூலம் எப்போதும் ரசிகர்களின் மனதில் வாழ்ந்து கொண்டுதான் இருப்பார்.
சமீபத்தில் நடிகர் விவேக் இறுதியாக பங்கேற்ற “எங்க சிரி பார்ப்போம்” என்ற காமெடி நிகழ்ச்சி அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியானது. இந்நிகழ்ச்சியை பார்த்த பலரும் நடிகர் விவேக் உடனான அவர்களது நினைவுகளை சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்து வருகிறார்கள்.
அந்த வகையில் பிரபல இயக்குனர் கெளதம் மேனன் விவேக் இறுதியாக பேசிய சில விஷயங்களை அவரது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார். அவர் கூறியிருப்பதாவது, “டிஜிட்டல் வெளியீடாக விவேக்குடன் ஒரு படம் திட்டமிட்டிருந்தேன். அவரது முதல் ஓடிடி நிகழ்ச்சியான ‘எங்க சிரி பார்ப்போம்’ நிகழ்ச்சி வெளியாகும் வரை காத்திருக்க வேண்டும் என்றார்.
அதுதான் எங்கள் கடைசி உரையாடல். அவரது முதல் ஓடிடி நிகழ்ச்சியைப் பார்க்கும்போது அதை நினைத்துப் பார்க்கிறேன். என்ன ஒரு உற்சாகமான நிகழ்ச்சி. சொக்கு, ரிவால்வர் ரிச்சர்ட் இரண்டு கதாபாத்திரங்களின் நினைவுகளுடன்” என கெளதம் மேனன் தனது நினைவுகளை பகிர்ந்துள்ளார்.
கெளதம் மேனன் மட்டுமல்லாமல் பல திரை பிரபலங்கள் நடிகர் விவேக்கை மிஸ் செய்வதாக கூறி வருகின்றனர். எந்தவித பாகுபாடும் இன்றி அனைவரிடமும் அன்பாக பழகும் அந்த மனிதரை யாருக்குத்தான் பிடிக்காமல் போகும். அப்படிப்பட்ட நல்ல மனிதர் தற்போது நம்முடன் இல்லை என்பதுதான் சோகமான செய்தி. இருப்பினும் அவரது காமெடி மூலம் என்றும் நம்மை சிரிக்க வைத்துக் கொண்டு தான் இருப்பார்.