தமிழ் சினிமா கண்டெடுத்த முத்தாக கருதப்படும் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் 93 ஆவது பிறந்த நாள் இன்று. இவர் பராசக்தி என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். திரையுலகிற்கு வரும்முன் மேடை நாடகங்களில் நடித்துக் கொண்டிருந்தார்.
அந்த சமயத்தில் ‘சிவாஜி கண்ட இந்து ராஜ்யம்’ என்ற மேடை நாடகத்தில் பேரரசர் சிவாஜியாக நடிகர் திலகம் நடித்ததால் அவருடைய நடிப்பை கண்டு வியந்த மெச்சிய தந்தை பெரியார் முதலாக அவரை சிவாஜி கணேசன் என்று அழைத்ததன் மூலம், தற்போதுவரை திரை உலகமே அவரை ‘நடிகர் திலகம் சிவாஜி கணேசன்’ என்று கொண்டாடி வருகிறது.
தமிழ் சினிமாவின் 300க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் பிரம்மிப்பூட்டும் தனது நடிப்பினை வெளிக்காட்டிய சிவாஜி அவர்கள், தமிழில் மட்டும் அல்லாமல் தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் என பிற மொழிகளிலும் உணர்ச்சிபூர்வ நடிப்பினை வெளிக்காட்டி உள்ளார்.
மக்களால் நடிப்புச் சக்கரவர்த்தி என அழைக்கப்படும் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் சரித்திர வீரர்களின் கதாபாத்திரங்களான மனோகரா, கர்ணன், ராஜராஜ சோழன், கப்பலோட்டிய தமிழன், வீரபாண்டிய கட்டபொம்மன் உள்ளிட்ட கதாபாத்திரங்களை ஏற்று நடித்தது மட்டுமல்லாமல், அதில் இவர் பேசியிருக்கும் வசனங்களும் பெயர் பெற்றவை.
அத்துடன் கலைமாமணி விருது, பத்மஸ்ரீ, பத்மபூஷன் விருது, தாதா சாகேப் பால்கே விருது பல விருதுகளை வாங்கிக் குவித்த சிவாஜிகணேசனை தற்போது அவருடைய பிறந்தநாளான இன்று, நடிகர் திலகம் சிவாஜி கணேசனை கௌரவப் படுத்தும் விதத்தில் அவருடைய உருவத்தைப் போன்றே டூடுல் போட்டு கூகுள் நிறுவனம் கௌரவப்படுத்தி உள்ளது.
எனவே நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் பிறந்த நாளை திரையுலகமே கொண்டாடும் தினமான இன்றைய தினத்தை அரசு விழாவாக கொண்டாடுவதற்கும் தமிழக அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.