நடிகர் சூர்யா படங்களில் நடிப்பதோடு மட்டுமல்லாமல் அவரது 2டி எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் மூலம் பல படங்களை தயாரித்து வருகிறார். அந்த வகையில் தற்போது சூர்யா தயாரித்து நடித்துள்ள படம் தான் ஜெய்பீம். இயக்குனர் தா.செ.ஞானவேல் எழுதி இயக்கியுள்ள ஜெய் பீம் படம் தீபாவளி அன்று ஓடிடியில் வெளியாக உள்ளது.
ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு வழக்கறிஞராக இருக்கும்போது இருளர் இன மக்களுக்காக வாதாடிய ஒரு வழக்கை அடிப்படையாகக் கொண்டே ஜெய் பீம் படம் உருவாகி உள்ளதாம். இப்படம் வரும் நவம்பர் 2ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் நடிகர் சூர்யா இன்ஸ்டாகிரம் லைவ் வீடியோவில் ஜெய் பீம் படத்தின் அனுபவம் குறித்து உரையாடினார்.
அப்போது தொகுப்பாளினி கீர்த்தியுடன் பேசிய சூர்யா கூறியதாவது, “ஜெய் பீம் எனக்கு மிகவும் ஸ்பெஷலான படம். வாக்காளர் அட்டை, சாதி சான்றிதழ்கூட இல்லாமல் சென்னைக்கு அருகிலேயே 80 கிலோ மீட்டர் தொலைவில் இருளர் இன மக்கள் வசித்து வருகிறார்கள். 1995 ஆம் ஆண்டு நடந்த உண்மை சம்பவத்தைதான் படமாக உருவாக்கியுள்ளோம். இதற்காக, இயக்குனர் ஞானவேலுக்கு நன்றிகள்.
இந்த படத்திற்கு ஜெய் பீம் என்று தலைப்பு வைக்க முடிவு செய்தோம். ஆனால், தலைப்பை இயக்குனர் பா.ரஞ்சித் ஏற்கனவே பதிவு செய்து வைத்திருந்தார். அவரிடம் ஜெய் பீம் தலைப்பை வைத்துக்கொள்ளலாமா? என கேட்டேன். உடனே தாராளமா வச்சிக்கோங்க சார். ஜெய் பீம் எல்லோருக்கும் பொதுவான வார்த்தை என்று அனுமதி கொடுத்தார். ரஞ்சித் சாருக்கு இந்த நேரத்தில் நன்றி கூறி கொள்கிறேன். அவருக்கு மிகப்பெரிய மனசு” என கூறியுள்ளார்.
நடிகர் சூர்யாவுக்காக இயக்குனர் ரஞ்சித் ஜெய் பீம் தலைப்பை விட்டு கொடுத்துள்ள சம்பவம் சூர்யா ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும், சூர்யா ரசிகர்களும் இயக்குனர் ரஞ்சித்திற்கு நன்றி தெரிவித்து வருகிறார்கள். ஜெய் பீம் படம் நிச்சயம் தமிழ் சினிமாவில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.