ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியாகி வரவேற்பை பெற்று வரும் படம் ஜெய் பீம். 1993 இல் நடந்த உண்மை சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இத் திரைப்படத்தை பலரும் பாராட்டி வருகின்றனர்.
படம் எவ்வளவு பாராட்டை பெற்றதோ அந்த அளவிற்கு சர்ச்சைகளையும் சந்தித்து வருகிறது. இத்திரைப்படத்தின் தலைப்பில் தொடங்கி படத்தில் உள்ள காட்சிகள் வரை சர்ச்சை ஆக்கப்பட்டு வருகிறது.
படத்தில் ஒரு காட்சியில் குற்றம் செய்த போலீஸ் வீட்டில் வன்னியர் சமூகத்தை குறிப்பிடும் வகையில் அக்னி கலசம் இருப்பது போன்ற காலண்டர் மாற்றப்பட்டு இருக்கும். இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் காலண்டரில் இருந்த படத்தை படக்குழு மாற்றியது.
மேலும் காவல் நிலையத்தில் விசாரணை கைதியை அடித்துக் கொன்ற போலீஸ் அதிகாரியின் பெயர் அந்தோணிசாமி. ஆனால் இயக்குனர் உண்மை பெயருக்கு பதிலாக குருசாமி என்ற பெயரை வேண்டுமென்றே வைத்துள்ளார் என்ற குற்றமும் எழுந்து வருகிறது. இதற்காக வன்னியர் சங்கம் சார்பில் 5 கோடி இழப்பீடு கேட்டு சூர்யா மற்றும் அமேசான் நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
இது ஒருபுறமிருக்க தற்போது அடுத்த சர்ச்சை வெடித்துள்ளது. படத்தின் நிஜ நாயகனான கோவிந்தன் வன்னியர் சமூகத்தை சேர்ந்தவர் என்றும் அவரை படத்தில் வன்னியராக காட்டவில்லை என்றும் ஒரு சார்பினர் கோஷம் எழுப்பி வருகின்றனர்.
இதற்கு பதிலடி தரும் வகையில் கோவிந்தன், நான் வன்னியர் இல்லை கம்யூனிஸ்ட் என்றும் என்னை வன்னியர் என்றோ படையாட்சி என்றோ ஜாதி அரசியலை கொண்டு வராதீர்கள் என்று பதிலளித்துள்ளார். அவரின் இந்த பதில் மூலம் தற்போது எழுந்து வரும் சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.