செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

விவேக்கு பதிலாக தரமான ஹீரோவை இறக்கும் ஷங்கர்.. இந்தியன் 2 லேட்டஸ்ட் அப்டேட்

அண்மையில் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியான மலையாள படமான மின்னல் முரளி ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்றது. இப்படத்தில் வில்லனாக அசத்தியிருந்தார் குரு சோமசுந்தரம். இவர் மின்னல் முரளி படத்திற்காகவே மலையாள மொழி கற்றுக்கொண்டு சொந்தக் குரலில் பேசி உள்ளார்.

குரு சோமசுந்தரம் இயக்குனர் தியாகராஜா குமாரராஜாவின் ஆரண்ய காண்டம் திரைப்படம் மூலம் திரையுலகிற்குள் வந்தார். அதன் பின் கடல், பாண்டிய நாடு, ஜிகர்தண்டா மற்றும் ஜோக்கர் போன்ற படங்களிலும் நடித்துள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் இணைந்து பேட்ட படத்தில் மாவட்ட ஆட்சி தலைவராக குரு சோமசுந்தரம் நடித்திருந்தார்.

அதன் பிறகு இவர் சூர்யா நடிப்பில் வெளியான ஜெய்பீம் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இறுதியாக பாபு தமிழ் இயக்கிய படத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் குரு சோமசுந்தரம் கமலின் இந்தியன் 2 படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது.

இயக்குனர் ஷங்கர் மற்றும் தயாரிப்பு தரப்புடன் ஏற்பட்ட மோதல் காரணமாக இந்தியன் 2 படம் கிடப்பில் போடப்பட்டது. இந்நிலையில் இரு தரப்பினரும் சமாதானம் ஆனதால் விரைவில் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கப்பட உள்ளது.

இந்தியன் 2 படத்தில் நடிகர் விவேக் ஒப்பந்தமாகி சில காட்சிகளில் நடித்திருந்தார். ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக கடந்த ஏப்ரல் 17ஆம் தேதி உயிரிழந்தார். இதனால் விவேக் காட்சிகளை அப்படியே முடித்து விடலாமா அல்லது அவருக்கு பதிலாக வேறொரு நடிகரை நடிக்க வைக்கலாமா என படக்குழு ஆலோசித்து வந்தது.

இந்நிலையில் விவேக் கதாபாத்திரத்தில் குரு சோமசுந்தரம் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பல்வேறு படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து அசத்திய குரு சோமசுந்தரம் இந்தியன் 2 படத்தில் அவரின் நடிப்பின் மூலம் அடுத்த கட்டத்திற்கு செல்வார் என எதிர்பார்க்கலாம்.

Trending News