சமீபகாலமாக படங்கள் வெற்றி பெறுகிறதோ, இல்லையோ. மொக்கை படத்தில் நடிக்கும் நடிகர்களுக்கு கூட எப்படி ஏராளமான பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது என்பது தெரியாமல் கோலிவுட்டின் முன்னணி தயாரிப்பாளர்கள் பலரும் மண்டையை பிய்த்துக் கொள்கிறார்களாம்.
ஒருகாலத்தில் தமிழ் சினிமாவில் கொடிகட்டிப் பறந்த தயாரிப்பாளர்கள் பலர் தற்போது சினிமாவில் இல்லை. புதிய புதிய தயாரிப்பாளர்கள் வந்து கொண்டிருக்கின்றனர். அந்த வகையில் இளம் நடிகர்கள், ஓரளவு பிரபலமான நடிகர்கள் ஆகியோரை வைத்து கொண்டு வருடத்திற்கு மூன்று நான்கு படங்களை தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர்.
அந்த வகையில் இசையமைப்பாளரும் நடிகருமான ஜிவி பிரகாஷ் நடிப்பில் இதுவரை 14 படங்கள் வெளியாகியுள்ளன. ஆனால் அதில் மூன்று படங்கள் மட்டுமே வெற்றியை பெற்றுள்ளது. டார்லிங், த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா மற்றும் சிவப்பு மஞ்சள் பச்சை ஆகிய படங்களே வெற்றி படங்கள். நாச்சியார் படம் நடிப்புக்கு பெயர் வாங்கினாலும் வியாபார ரீதியாக தோல்வி தான்.
இப்படி 14 படங்களில் நடித்து வெறும் மூன்று படங்கள் மட்டுமே வெற்றி கொடுத்த ஜிவி பிரகாஷுக்கு மட்டும் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் எப்படி கிடைக்கிறது என பலரும் யோசித்து வருகிறார்களாம். ஜிவி பிரகாஷ் இசை அமைப்பதில் கில்லாடிதான். ஆனால் நடிப்பில் தற்போது தான் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி வருகிறார்.
பெரும்பாலும் ஜிவி பிரகாஷின் படங்களில் 18+ வசனங்களும் காட்சிகளும் அளவுக்கு அதிகமாக இருக்கின்றன. படத்தில் குறைந்தது ஒரு உதட்டோடு உதடு முத்தம் காட்சியாவது வைத்து நடித்து வருகிறார். இதனாலேயே குடும்பத்தோடு ஜிவி பிரகாஷ் படத்தை பார்க்க முடியாத சூழ்நிலை. இளம் ரசிகர்களின் வரவேற்பும் திரையரங்குகளை பொருத்தவரை குறைவுதான்.
இருந்தும் ஜிவி பிரகாஷ் நடிப்பில் அடுத்தடுத்து ஐங்கரன், ஆயிரம் ஜென்மங்கள், அடங்காதே, 4ஜி, ஜெயில், காதலை தேடி நித்தியானந்தா, காதலிக்க யாரும் இல்லை, பேச்சிலர், டிராப் சிட்டி போன்ற படங்கள் ரிலீசுக்கு தயாராக இருக்கின்றன. அதில் ஒன்று ஹாலிவுட் படம். இப்படி தோல்வி படங்கள் பல கொடுத்தாலும் வாய்ப்புகள் அதிகமாக வைத்திருக்கும் ஜிவி பிரகாஷ் குடும்பங்களை கவரும் வகையில் படம் நடித்தால் அவரது வளர்ச்சி இன்னும் நன்றாக இருக்குமே என்பதே தாழ்வான கருத்து.