தமிழ் சினிமாவில் சின்ன குஷ்பு என ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படுபவர் நடிகை ஹன்சிகா மோத்வானி. முன்னணி நடிகையாக வலம் வரும் ஹன்சிகாவின் 50வது படமான மஹா விரைவில் ஓடிடியில் வெளியாக உள்ளது.
மேலும் இப்படத்தில் முன்னணி நடிகரும், ஹன்சிகாவின் முன்னாள் காதலருமான சிம்பு முக்கிய வேடத்தில் நடித்துள்ளதால், இப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
அது மட்டுமின்றி சமீபத்தில் வெளியான இப்படத்தின் டிரைலர் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் ஹன்சிகாவின் அடுத்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஹன்சிகாவின் அடுத்த படம் தெலுங்கில் உருவாக உள்ளது.
இப்படம் ஹன்சிகாவின் திரைப்பயணத்தில் ஒரு சிறப்புப் படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. காரணம் என்னவென்றால், இந்த படம் ஒரே ஷாட்டில் ஹன்சிகா மட்டும் நடிக்க உருவாக உள்ளதாம். இந்த படத்துக்கு 105 மினிட்ஸ் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
சமீபகாலமாக கதாநாயகிகளும், கதாநாயகர்களுக்கு சமமாக முக்கியத்துவம் அளிக்கும் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்கள். உதாரணமாக நயன்தாரா, த்ரிஷா, சமந்தா போன்ற முன்னணி நடிகைகள் தங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதாபாத்திரங்களை மட்டுமே தேர்வு செய்து நடித்து வருகிறார்கள்.
அந்த வகையில் தற்போது ஹன்சிகாவும் அதை ஃபாலோ செய்கிறார். ஹன்சிகா எடுத்துள்ள இந்த புதிய முடிவு அவருக்கு கை கொடுக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.