தமிழ் சினிமாவில் ஒரு மாஸ் ஹீரோவின் படமாக இருந்தாலும் அவருக்கு இணையான வில்லன் கதாபாத்திரம் இருந்தால் மட்டுமே தன்னை நிரூபிக்க முடியும். அவ்வாறு ஹீரோவுக்கு இணையான வில்லன்களை இறக்கி வெற்றிகண்ட படங்களை பார்க்கலாம்.
அமைதிப்படை: மணிவண்ணன் இயக்கத்தில் வெளியான அமைதிப்படை படத்தில் சத்யராஜ் இரட்டை வேடத்தில் நடித்திருந்தார். இன்ஸ்பெக்டராக தங்கவேல் கதாபாத்திரத்திலும், வில்லனாக எம்எல்ஏ நாகராஜசோழன் கதாபாத்திரத்திலும் நடித்திருந்தார். இப்படத்தில் ஹீரோ சத்யராஜை விட வில்லன் சத்யராஜ் திரையரங்குகளில் அதிக கைதட்டல் பெற்றார்.
மிஸ்டர் பரத்: எஸ்பி முத்துராமன் இயக்கத்தில் வெளியான மிஸ்டர் பரத் படத்தில் ரஜினி பரத் கதாபாத்திரத்திலும், சத்யராஜ் கோபிநாத் கதாபாத்திரத்திலும் நடித்திருந்தார்கள். தன் மகன் பரத் என்று தெரிந்தும் ஏற்றுக்கொள்ள மறுக்கும் தந்தை கோபிநாத்தாக சத்யராஜ் நடித்திருந்தார். இப்படத்தில் ரஜினிக்கு ஒரு படி மேலாக போய் தனது நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார் சத்யராஜ்.
பாட்ஷா: ரஜினி, நக்மா, ரகுவரன் நடிப்பில் வெளியான திரைப்படம் பாட்ஷா. ரஜினியைப் போலவே ரகுவரனுக்கு இப்படம் மிகப்பெரிய பெயரை வாங்கிக் கொடுத்தது. இப்படத்தில் பெரிதாக சண்டை காட்சிகள் எதுவும் இல்லை. இவர்கள் இடையே புத்தியை வைத்து நடப்பது தான் சண்டை. தன்னுடைய கச்சிதமான நடிப்பால் மார்க் ஆண்டனி ஆகவே வாழ்ந்திருந்தார் ரகுவரன்.
துப்பாக்கி: ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் துப்பாக்கி. இப்படத்தில் விஜய்க்கு இணையான வில்லன் கதாபாத்திரத்தில் வித்யூத் ஜம்வால் நடித்திருந்தார். இப்படத்தில் தீவிரவாதிகளின் தலைவனாக தனது சிறந்த நடிப்பினை வெளிப்படுத்தி இருந்தார் வித்யூத் ஜம்வால்.
தனி ஒருவன்: ஜெயம் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி, நயன்தாரா, அரவிந்த் சாமி நடிப்பில் வெளியான திரைப்படம் தனி ஒருவன். அதுவரை காதல் நாயகனாக பார்த்த அரவிந்த்சாமி வில்லனாக மிரட்டிய படம் தனி ஒருவன். இப்படத்தில் சித்தார்த் அபிமன்யூவாக படத்தின் இறுதிவரை ரசிகர்களின் கைதட்டலை பெற்றார் அரவிந்த்சாமி.
விக்ரம் வேதா: விக்ரம் ஆக மாதவனும், வேதாவாக விஜய் சேதுபதியும் நடித்து வெளியான திரைப்படம் விக்ரம் வேதா. 16 கொலைகள் செய்த வேதாவை சுட்டுக் கொல்ல வலைவீசித் தேடுகிறான் 18 என்கவுன்ட்டர்கள் செய்த விக்ரம். இவர்கள் இடையே நடக்கும் யுத்தம்தான் விக்ரம் வேதா. இப்படத்தில் விஜய் சேதுபதி தன்னுடைய மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.
ஜிகர்தண்டா: கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சித்தார்த், பாபி சிம்ஹா, லட்சுமிமேனன் நடிப்பில் வெளியான திரைப்படம் ஜிகர்தண்டா. இப்படத்தில் நிஜ ரவுடியான பாபிசிம்ஹாவின் கதையை படமாக எடுக்க சித்தார்த் முடிவு செய்கிறார். இப்படத்தில் அதிபயங்கர ரவுடியாக அசால்ட் சேது கதாபாத்திரத்தில் பாபி சிம்ஹா அசத்தியிருந்தார்.
கே ஜி எஃப்: பிரசாந்த் நீல் இயக்கத்தில் யாஷ், ஸ்ரீநிதி ஷெட்டி நடிப்பில் வெளியான திரைப்படம் கே ஜி எஃப். இப்படத்தில் யாஷ் தாதாவாக உள்ளார். இவருக்கு இணையான வில்லனாக ராமச்சந்திர ராஜூ நடித்திருந்தார். இவர் இப்படத்தில் கருடவாக தனது சக்தி வாய்ந்த நடிப்பால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். இப்படத்தின் மூலம் இவருக்கு பாராட்டுக்களும், படவாய்ப்புகள் குவிந்தது.