தங்களின் கற்பனை கலந்த கதையை சுமார் இரண்டு மணி நேரம் வரை திரையரங்கில் உட்கார்ந்து ரசிகர்களுக்கு பார்க்க வைப்பது என்பது அவ்வளவு எளிதான காரியமல்ல. ஒரு சிறந்த இயக்குனரால் மட்டுமே இதை செய்ய முடியும். அப்படி ரசிகர்களால் கொண்டாடப்பட்ட சிறந்த தமிழ் இயக்குனர்கள் தற்போது நடிகராகவும் தங்களது முத்திரையைப் பதித்து வருகிறார்கள்.
மண் வாசனையுடன் ஒரு சிறந்த கிராம பின்னணியில் படம் வழங்க பாரதிராஜாவால் மட்டுமே முடியும். அதனால் தானோ என்னவோ இவரை இயக்குனர் இமயம் என ரசிகர்கள் அழைத்து வருகிறார்கள். இவர் 1980ஆம் ஆண்டு வெளியான கல்லுக்குள் ஈரம் திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் தன்னை ஒரு சிறந்த நடிகராக அறிமுகப்படுத்திக் கொண்டார். அதன் பிறகு பாண்டியநாடு, நம்ம வீட்டு பிள்ளை, ஈஸ்வரன் என 20 க்கும் மேற்பட்ட படங்களில் தன் நடிப்பு திறமையால் ரசிகர்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்துள்ளார்.
அதேபோல் வாலி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமான எஸ் ஜே சூர்யா நியூ, ஸ்பைடர், மெர்சல் போன்ற படங்களின் மூலமாக தன்னை தவிர்க்க முடியாத நடிகராக மாற்றிக்கொண்டுள்ளார்.
பல தேசிய விருதுகளை பெற்ற பார்த்திபன், இயக்குனர் என்பதையும் தாண்டி ஒரு நடிகராக பட்டி தொட்டி எங்கும் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்துள்ளார். பார்த்திபன், வடிவேலு இணைந்து நடித்த வெற்றிக்கொடி கட்டு திரைப்படத்தின் நகைச்சுவை காட்சியை ரசிக்காதவர்கள் யாருமே இருக்க முடியாது.
இந்த வரிசையில் தற்போது செல்வராகவனும் இணைந்துள்ளார். புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன போன்ற பல வெற்றிப்படங்களை இயக்கிய செல்வராகவன், முதல் முறையாக நடிகராக அவதாரம் எடுத்துள்ளார்.
அருண் மாதேஷ்வரன் இயக்கும் சாணிக்காயிதம் திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷுடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இயக்குனராக ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற செல்வராகவன், நடிகராக தன்னை தக்கவைத்துக்கொள்வாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.