தமிழ் சினிமாவில் கதாநாயகனுக்கு இணையான மற்றொரு கதாபாத்திரம் வில்லன் கதாபாத்திரம் ஆகும். நம்பியாரில் தொடங்கி ரகுவரன் பிரகாஷ்ராஜ் போன்ற வில்லன் நடிகர்கள் வரை திரைக்கதைக்கு உறுதுணையாக இருந்தவர்கள். அவர்களுக்கு போட்டியாக நம் தமிழ் சினிமாவின் கதாநாயகர்களே வில்லன் கதாபாத்திரத்தில் கலக்கியுள்ளனர். அந்த நடிகர்களின் படங்களை பற்றி இதோ உங்கள் பார்வைக்கு.
நடிகர் ரஜினிகாந்த்: சூப்பர் ஸ்டார் அறிமுகம் ஆனதே வில்லன் கதாபாத்திரத்தில் தான் மேலும் அதனை தொடர்ந்து பல படங்களில் வில்லன் ஆக நடித்தவர். அவர் நடித்த 16 வயதினிலே திரைப்படத்தில் பரட்டை கேரக்டர் ரசிகர்களிடையே பட்டையை கிளப்பியது. மேலும் அவர் நடித்த பில்லா, நெற்றிக்கண் மற்றும் எந்திரன் படங்களில் வில்லன் கதாபாத்திரம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
நடிகர் கமலஹாசன்: நடிகர் கமல் ஒன்பது வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்த திரைப்படம் தசாவதாரம் அதில் ஒன்று வெளிநாட்டு வில்லன் கதாபாத்திரம். இந்த கதாபாத்திரத்தின் உருவம் மற்றும் முக அமைப்பு போன்றவை முற்றிலும் மாறுபட்டு இருந்தது. அதேபோன்று ஆளவந்தான் திரைப்படத்தில் அண்ணன் தம்பி இரு வேடத்தில் நடிகர் கமல்ஹாசன் நடித்து உள்ளார். அதில் தம்பி கதாபாத்திரத்தில் தன் உடலமைப்பை மாற்றி வில்லனாக நடித்து நம்மை மிரள வைத்திருப்பார் நடிகர் கமலஹாசன்.
நடிகர் அஜித்குமார்: நடிகர் அஜித் வில்லன், வரலாறு, பில்லா, மங்காத்தா, வாலி போன்ற பல திரைப் படங்களில் வில்லனாக நடித்து நம்மை மிரட்டியுள்ளார். வாலி திரைப்படத்தில் காது மற்றும் வாய் பேச முடியாத கதாபாத்திரத்தில் முதன் முதலாக நடித்து நம்மளை ஆச்சரியப்படுத்தி இருப்பார். அதனைத் தொடர்ந்து மங்காத்தா திரைப்படத்தில் அவர் நடித்த ஆன்ட்டி ஹீரோ கதாபாத்திரமான விநாயக் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.
நடிகர் விஜய்: அழகிய தமிழ்மகன் என்னும் திரைப்படத்தில் நடிகர் விஜய் இரட்டை கதாபாத்திரங்களில் நடித்தார். அதில் ஒன்று வில்லன் கதாபாத்திரம். ஆள்மாறாட்டம் செய்து நாயகியை திருமணம் செய்து அவருடைய சொத்துக்களை கைப்பற்றுவது போல் இருக்கும் கதாபாத்திரத்தில் நடிகர் விஜய் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்.
நடிகர் சூர்யா: நடிகர் சூர்யா 24 என்ற திரைப்படத்தில் 3 கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதில் வயதான சூர்யா கதாபாத்திரம் மிகவும் வில்லத்தனம் வாய்ந்ததாக இருந்தது. தனது சொந்த தம்பியின் குடும்பத்தை அளித்து அவரது கண்டுபிடிப்பை கைப்பற்றும் கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.
நடிகர் விக்ரம்: அந்நியன் மற்றும் இருமுகன் ஆகிய திரைப்படங்களில் நடிகர் விக்ரம் தனது வில்லத்தனத்தால் மக்களிடையே வரவேற்பை பெற்றார். அதிலும் அந்நியன் திரைப்படத்தில் அந்நியனாக அவருடைய உடல்மொழியும் குரலும் இன்றளவும் மறக்க முடியாதது. இருமுகன் திரைப்படத்தில் அவருடைய பெண்மை கலந்த வில்லன் கதாபாத்திரம் மிகச் சிறப்பாக அமையப் பெற்றது.