பாடகர் மற்றும் இசையமைப்பாளராக தமிழ் சினிமாவில் நுழைந்து மீசையை முறுக்கு படம் மூலமாக இயக்குனராகவும் நடிகராகவும் அவதாரம் எடுத்தவர் தான் ஹிப்ஹாப் ஆதி. தொடர்ந்து நட்பே துணை, நான் சிரித்தால் ஆகிய படங்களிலும் கதாநாயகனாக நடித்தார். இந்த படங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன.
தற்போது ‘சிவகுமாரின் சபதம்’ படத்தை இயக்கி முடித்துள்ளார் ஹிப்ஹாப் ஆதி. இதிலும் அவரே ஹீரோவாக நடித்துள்ளார். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இப்படம் குறித்த சுவாரஸ்யமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. படத்துக்கு கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், இசை, இயக்கம், நடிப்பு என முக்கியமான வேலைகள் அனைத்தையும் அவரே செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழ் சினிமாவை பொருத்தவரை நடிகர் சிம்புவின் தந்தையும், பிரபல இயக்குனர் மற்றும் நடிகருமான டி. ராஜேந்தர் மட்டுமே ஒரு படத்துக்கு தேவையான சகல வேலைகளையும் ஒரே ஆளாக செய்யக் கூடிய திறமை படைத்தவர். அதனால் அவரை தமிழ் சினிமா உலகம் தசாவதானி என்று குறிப்பிடும்.
இவரைப்போலவே ஹிப்ஹாப் ஆதியும் தசாவதானியாக முயற்சிகள் எடுத்துள்ளது பாராட்டிற்குரியது. இவரது முயற்சி எந்த அளவிற்கு பலனளிக்கும் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.