கோலிவுட்டில் பல நடிகர்கள் இயக்குனர் பாடகர் இசையமைப்பாளர் என பல அவதாரங்களில் வலம் வருகிறார்கள். அந்த வரிசையில் இசையமைப்பாளராக அறியுகமாகி நடிகராக அவதாரம் எடுத்தவர் தான் ஹிப் ஹாப் ஆதி. இவர் மீசைய முறுக்கு படம் மூலம் நடிகராக களத்தில் இறங்கினார். அப்படம் வெற்றி பெறவே தொடர்ந்து நட்பே துணை, நான் சிரித்தால் உள்ளிட்ட படங்களில் நடித்தார்.
இதனை தொடர்ந்து ஆதி நடிப்பில் சமீபத்தில் தியேட்டரில் சிவகுமாரின் சபதம் என்ற படம் வெளியானது. நெசவாளர்கள் சந்திக்கும் பிரச்னைகளை மையமாக வைத்து உருவான இப்படம் ரசிகர்கள் மத்தியில் அந்த அளவிற்கு வரவேற்பை பெறவில்லை. ஆனால் ஓரளவிற்கு படம் வசூலானது.
இந்நிலையில் சிவகுமாரின் சபதம் படத்தை தொடர்ந்து நடிகர் ஆதி, அறிமுக இயக்குனர் அஸ்வின் ராம் இயக்கத்தில் உருவாகி வரும் அன்பறிவு படத்தில் நடித்து வருகிறார். இதில் ஆதிக்கு ஜோடியாக காஷ்மீரா பர்தேஷி நடிக்கிறார். இவர்கள் தவிர நெப்போலியன், விதார்த், தீனா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.
சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் இப்படத்திற்கு ஆதியே இசையமைக்கிறார். தற்போது அனைத்து பணிகளும் முடிந்து விட்ட நிலையில் படம் வெளியீட்டிற்கு தயாராக உள்ளது. இந்நிலையில் அன்பறிவு படம் நேரடியாக ஓடிடியில் வெளியாக உள்ளதாக ஆதி அறிவித்துள்ளார்.
இதுகுறித்து டிவிட்டர் பக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது, “அன்பை பெருக்கி, அறிவை விதைத்து, குடும்பத்துடன் கொண்டாடி மகிழ, உங்களின் பேராதரவோடு டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் அன்பறிவு படம் விரைவில் வெளியாகும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
அனேகமாக படம் பொங்கலுக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே பொங்கலுக்கு அஜித்தின் வலிமை, விக்ரமின் மகான், தனுஷின் மாறன் போன்ற படங்கள் வரிசை கட்டி நிற்கும் நிலையில், ஆதியின் படம் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.