எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி உண்மையான பாசத்தை மட்டுமே அள்ளித் தருவதில் நட்புக்கு வேறு எதுவும் நிகரில்லை. நண்பனுக்காக உயிரை கொடுக்கும் அளவிற்கு பாசம் வைக்கும் நட்பிற்கு தனி மதிப்பு உண்டு. இதற்கு ஆண் பெண் வயது வித்தியாசம் எதுவுமில்லை அவ்வகையில் நட்பினை போற்றி நம் தமிழ் சினிமா பல திரைப்படங்களை நமக்கு கொடுத்துள்ளது.
அதில் சில முக்கிய கதாபாத்திரங்கள் என்றும் நம் நினைவில் நீங்கா இடம் பெற்றிருக்கும். நட்பினை மையமாக வைத்து வெளியாகி வெற்றி பெற்ற சில திரைப்படங்கள் இதோ உங்களுக்காக.
தளபதி: 1991ஆம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் ரஜினிகாந்த், மம்முட்டி, சோபனா ஆகியோர் நடிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் தான் தளபதி. அதில் வரும் கதாபாத்திரங்களான தேவா மற்றும் சூர்யா இன்றளவும் மக்களால் பேசப்பட்டு வருகிறது. இந்த படத்தின் சிறந்த இயக்குனருக்கான பிலிம்பேர் விருது இயக்குனர் மணிரத்னம் அவர்களுக்கு வழங்கப்பட்டது.
அண்ணாமலை: இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த், சரத்பாபு மற்றும் குஷ்பு ஆகியோர் நடித்த திரைப்படம் அண்ணாமலை. நட்பு மற்றும் பழிவாங்கல்,துரோகம் போன்ற கருவினை மையமாகக் கொண்ட கதைக்களம் தான் இத்திரைப்படம். 1992 ஆம் ஆண்டு வெளிவந்த இத்திரைப்படத்தின் சிறந்த நடிகருக்கான விருதை நடிகர் ரஜினிகாந்த் பெற்றார்.
நட்புக்காக: இயக்குநர் கே.எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் நடிகர் சரத்குமார், விஜயகுமார், சிம்ரன் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் நட்புக்காக. இதில் நடிகர் சரத்குமார் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். மரணத்திலும் இணைபிரியாத நண்பர்களைப் பற்றிய கருவினை கொண்ட இத்திரைப்படம் பல விருதுகளை பெற்று மாபெரும் வெற்றி பெற்றது.
பிரியமான தோழி: இயக்குனர் விக்ரமன் இயக்கிய இத்திரைப்படம் ஆண் பெண் இருவரது நட்பினை பற்றிய கதைக்களம். இதில் நடிகர் மாதவன், ஸ்ரீதேவி விஜயகுமார், ஜோதிகா ஆகியோர் நடித்துள்ளனர். நண்பர்களாக உள்ள ஆணும் பெண்ணும் இறுதிவரை நண்பர்களாகவே இருக்க முடியும் என்ற கருத்தினை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இத்திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
புன்னகை தேசம்: நான்கு நண்பர்களின் வாழ்க்கையும் அதில் அவர்களின் தியாகத்தையும் பற்றி வெளிவந்த திரைப்படம் புன்னகை தேசம். இதில் நடிகர் தருண், குணால், ஹம்சவர்தன், தாமு ஆகியோர் தங்களது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். 2002 ஆம் ஆண்டு வெளியான இப்படம் அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்த திரைப்படமாகும்.