யோகி பாபுவின் நடிப்பில் இன்று வெளியாகி இருக்கும் திரைப்படம் தான் பொம்மை நாயகி. ஏற்கனவே இந்த படத்தின் டிரைலர் வெளிவந்து எதிர்பார்ப்பை தூண்டிய நிலையில் இப்போது படமும் பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது. அதிலும் ஃபேமிலி ஆடியன்ஸை இப்படம் வெகுவாக கவர்ந்து விட்டது என்று தான் சொல்ல வேண்டும்.
அதனாலேயே இப்படத்தை அனைவரும் கட்டாயம் பார்க்க வேண்டும் என்ற கருத்துக்களும் எழுந்துள்ளது. இதற்கு முக்கிய காரணமும் இருக்கிறது. ஏனென்றால் இப்படத்தின் கதையே பெண் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் அநீதி பற்றியும், சாதிய அடக்குமுறை பற்றியும் தான். அந்த வகையில் இப்படம் எப்படி இருக்கிறது என்பதை ஒரு விமர்சனம் வாயிலாக தெரிந்து கொள்வோம்.
Also read: யோகி பாபுவின் அழுத்தமான நடிப்பில் பொம்மை நாயகி.. அனல் பறக்கும் ட்விட்டர் விமர்சனம்
கதைப்படி யோகி பாபு தன் மனைவி மற்றும் குழந்தையுடன் சராசரி வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார். ஒரு சாதாரண டீக்கடை தொழிலாளியாக இருக்கும் யோகி பாபுவுக்கு அந்த வேலையும் திடீரென பறிபோகிறது. இதனால் சொந்தமாக ஒரு கடையை தொடங்க வேண்டும் என்ற முயற்சியில் அவர் இருக்கிறார். அந்த சமயத்தில் ஊர் திருவிழாவின்போது அவருடைய ஒன்பது வயது மகள் திடீரென காணாமல் போகிறார்.
அப்போது மேல் ஜாதியைச் சேர்ந்த இருவர் அந்த குழந்தையிடம் தவறாக நடக்க முற்படுகின்றனர். எப்படியோ யோகி பாபு தக்க சமயத்தில் வந்து தன் மகளை காப்பாற்றி விடுகிறார் ஆனாலும் இந்த பிரச்சனையை அவர் நீதிமன்றம் வரை கொண்டு செல்கிறார். இந்தப் போராட்டத்தில் அவருக்கு நீதி கிடைத்ததா? மேல் ஜாதியினரின் அடக்கு முறையை எதிர்த்து வெற்றி பெற்றாரா? என்பதுதான் இந்த படத்தின் முழு கதை.
Also read: யோகி பாபுவின் 200-வது படம்.. மெடிக்கல் மிராக்கலாக வெளியான ஃபர்ஸ்ட் லுக்
ஒரு காமெடியனாக நமக்கு அறிமுகமாகி இருந்தாலும் யோகி பாபு தன்னுடைய எதார்த்தமான நடிப்பை பல திரைப்படங்களில் கொடுத்திருக்கிறார். அந்த வகையில் இப்படத்தில் அவர் ஒரு அப்பாவாக தன் முழு உணர்வையும் பிரதிபலித்திருக்கிறார். மகள் ஆங்கிலத்தில் பேசுவதை பார்த்து பெருமைப்படுவது, குழந்தைக்காக நீதி கேட்டு அலைவது என்று ஒவ்வொரு காட்சியிலும் அவர் அனைவரையும் ஆச்சரியப்படுத்தி இருக்கிறார்.
அவருக்கு அடுத்தபடியாக பொம்மை நாயகியாக நடித்திருக்கும் ஸ்ரீமதி பல இடங்களில் கைத்தட்டலை பெறுகிறார். இப்படி படத்தில் அனைத்து கதாபாத்திரங்களும் தங்களுக்கான வேலையை சிறப்பாக செய்து இருக்கிறார்கள். அதிலும் போராடுற உசுரு போராடியே போகட்டும் என்பது போன்ற பல வசனங்கள் பாராட்ட வைக்கிறது.
இப்படி படத்தில் பல நிறைகள் இருந்தாலும் இரண்டாம் பாதியில் சில தொய்வு இருக்கிறது. அதிலும் இறுதி காட்சி ட்விஸ்ட் கலந்து இருக்கும் என்று எதிர்பார்த்தால் சாதாரணமாக முடிந்தது கொஞ்சம் ஏமாற்றம்தான். இருந்தாலும் ஒரு அழுத்தமான கதையை கொடுத்திருக்கும் இயக்குனரை நிச்சயம் பாராட்டி தான் ஆக வேண்டும். அந்த வகையில் இந்த பொம்மை நாயகி நிச்சயம் பார்க்கப்பட வேண்டிய ஒரு படம்.