லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் சமீபத்தில் விக்ரம் திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அதில் கமலின் நடிப்பு, ஆக்ஷன் காட்சிகள் என அனைத்தும் படு மிரட்டலாக இருந்தது. அதேபோன்று அனிருத்தின் இசையும் அந்த படத்திற்கு பக்க பலமாக அமைந்தது.
ஆனால் அந்த திரைப்படத்தில் இளையராஜாவின் இசையும் பயன்படுத்தப்பட்டிருப்பது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஆம் விக்ரம் திரைப்படத்தின் ஒரு குறிப்பிட்ட காட்சியில் இளையராஜாவின் இசையை லோகேஷ் கனகராஜ் பயன்படுத்தியிருக்கிறார்.
அதாவது இந்த திரைப்படத்தில் காளிதாஸ் ஜெயராம் இறந்து விடுவார். அவருடைய உடலை வீட்டில் வைத்திருக்கும் காட்சியின் போது சுற்றி இருக்கும் உறவுகள் சத்தமிட்டு அழுவார்கள். இதை பார்த்து கோபமான கமல்ஹாசன் அங்கு இருக்கும் பூச்சாடியை போட்டு உடைத்து விட்டு அனைவரும் வெளியே போகும்படி சைகை செய்வார்.
ஏனென்றால் அதிகமான சத்தம் அவருடைய பேரனின் உடல் நிலையை பாதிக்கும் என்பதால் அவர் இவ்வாறு செய்வார். மேலும் தன் மகன் இறந்த தூக்கத்தை தனக்குள்ளே வைத்துக் கொண்டு அவர் பேரக்குழந்தையை சமாதானப்படுத்துவார்.
மகனை இழந்த ஒரு அப்பாவின் துக்கமும், பேரனை இழந்து விடக்கூடாது என்ற ஒரு தாத்தாவின் தவிப்பும் அந்த காட்சியில் ரொம்பவும் உணர்வுபூர்வமாக காட்டப்பட்டிருக்கும். அப்படிப்பட்ட உருக்கமான காட்சியில் லோகேஷ், இசைஞானி இளையராஜாவின் இசையை பயன்படுத்தி இருப்பார்.
அது மட்டுமல்லாமல் பழைய விக்ரம் திரைப்படத்தின் தீம் மியூசிக் மற்றும் கைதி திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள தீம் மியூசிக் ஆகியவை இந்த திரைப்படத்திலும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இன்னும் கற்று ஆழ்ந்து கவனித்து பார்த்தால் பழைய விக்ரம் திரைப்படத்தில் இருக்கும் இசை தொடர்பான பல விஷயங்கள் இந்த படத்திலும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
இதை வைத்து பார்க்கும் போது அனிருத் என்னதான் நன்றாக பாடல்களை ரசிகர்களுக்கு பிடித்த வகையில் கொடுத்தாலும் பின்னணி இசையில் சில சமயங்களில் சொதப்பி விடுகிறார் என்று தான் தோன்றுகிறது. அதன் காரணமாகத்தான் லோகேஷ் இளையராஜாவின் இசையை பயன்படுத்தி இருக்க வேண்டும் என்ற ஒரு சந்தேகம் அனைவருக்கும் எழுகிறது. எது எப்படி இருந்தாலும் இன்றைய இளம் தலைமுறைகளுக்கு இசைஞானி ஒரு முன்னோடியாகவே திகழ்கிறார்.