தமிழ் சினிமாவின் தற்போதைய சென்சேஷனல் இசையமைப்பாளராக வலம் வந்து கொண்டிருக்கும் பிரபலம் ஒருவர் முதலில் தல அஜித் நடிப்பில் உருவான விவேகம், விஸ்வாசம் படங்களுக்கு இசையமைப்பாளராக ஒப்பந்தமாகி பின்னர் நிராகரிக்கப்பட்டதை சோகத்துடன் தெரிவித்துள்ளார்.
தல அஜித் நடிப்பில் உருவான விஸ்வாசம் மற்றும் விவேகம் ஆகிய படங்களை இயக்கியவர் சிறுத்தை சிவா. சிறுத்தை சிவா மற்றும் அஜித் கூட்டணி இதுவரை 4 படங்களில் பணியாற்றியுள்ளனர். அதில் மூன்று படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது.
இந்த படங்களில் எல்லாம் இசையமைப்பாளர்களாக தேவிஸ்ரீபிரசாத், அனிருத், இமான் போன்றோர் பணியாற்றினர். கடைசியாக இவர்கள் கூட்டணியில் வெளியான விஸ்வாசம் படத்திற்காக இமான் தேசிய விருதை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் விவேகம் மற்றும் விஸ்வாசம் படத்தில் முதன் முதலில் இசையமைப்பாளராக ஒப்பந்தமானது சந்தோஷ் நாராயணன் தானாம். இதை அவரே ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். அஜித் படம் என்றதும் கதை கூட கேட்காமல் ஒரே நிமிடத்தில் ஓகே சொல்லிவிட்டேன் என கூறினார்.

ஆனால் அதன் பிறகு ஏன் இசையமைப்பாளரை மாற்றினார்கள் என்பது தற்போது வரை தனக்கு புரியாத புதிராக உள்ளது எனவும் வருத்தப்பட்டுள்ளார். அஜித் படங்களில் பணியாற்றிவது அவருக்கு கனவாம். கண்டிப்பாக வருங்காலத்தில் தல அஜித் பட வாய்ப்பு தனக்கு கிடைக்கும் என பெரிதும் நம்பிக் கொண்டிருக்கிறார் சந்தோஷ் நாராயணன்.
கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்படும் படங்களில் சந்தோஷ் நாராயணன் இசை பெரிதும் பேசப்பட்டது. ஆனால் மாஸ் படங்களுக்கு இதுவரை சந்தோஷ் நாராயணன் பேசப்படும்படி இசையமைக்கவில்லை என்கிறார்கள் கோலிவுட் வாசிகள்.