இந்தியா மற்றும் இங்கிலாந்திற்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி டிரன்ட் பிரிட்ஜ்யில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருந்தது, வெற்றி பெற கிட்டத்தட்ட 150 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், எஞ்சிய கடைசி நாள் போட்டி முழுவதும் மழையால் பாதிக்கப்பட்டு போட்டி டிராவில் முடிந்தது.
சமீப காலமாக இந்திய அணியின் பந்துவீச்சு அசுர பலம் வாய்ந்ததாக உள்ளது. இந்த போட்டியில் இந்திய அணி பந்து வீச்சாளர்கள் மிகவும் சிறப்பாக செயல்பட்டுள்ளார். பொதுவாக, இந்தியா போன்ற துணைக் கண்டங்களில் உள்ள நாடுகளைச் சேர்ந்த வீரர்கள், இங்கிலாந்தில் முதல் நாளில் சரியான லைனில் பந்துவீச முடியாமல் திணறுவார்கள்.
ஆனால், இந்திய அணியோ எவ்வித தடுமாற்றமும் இன்றி சரியான லைனில் அற்புதமாகப் பந்துவீசி, இங்கிலாந்தின் பேட்ஸ்மேன்களை திணறடித்தனர்.இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் மிக சிறப்பாக செயல்பட்டு, இங்கிலாந்தை முதல் இன்னிங்ஸில் 183 ரன்களுக்கு சுருட்டியது.
அதேபோல், இரண்டாவது இன்னிங்ஸிலும் இங்கிலாந்தை 303 ரன்களுக்கு சுருட்டியது. பும்ரா மொத்தம் 9 விக்கெட்களை கைப்பற்றி அசத்தினார். ஷமி மற்றும் ஷர்தூல் இருவரும் தலா 4 விக்கெட்களை வீழ்த்தினார்கள்.
பும்ரா, சிராஜ், ஷமி ஆகியோர் பந்துவீச்சு பார்ப்பதற்கே பிரமிப்பாக இருந்தது. இங்கிலாந்து அணியின் கேப்டன் ரூட் மட்டும் சிறப்பாக செயல்படவில்லை என்றால் இந்திய அணி இந்த போட்டியில் நான்காம் நாள் வெற்றி பெற்று இருக்கும் என்று சமீபத்தில் பத்திரிக்கை ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ளார் பாகிஸ்தான் அணியின் ஜாம்பவான் இன்சமாம் உல் ஹக்.