இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி கப்பாவில் நடைபெற்றது. இந்தியாவிற்கு எதிராக டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 369 ரன்கள் எடுத்தது. இந்திய அணி முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 336 ரன்கள் எடுத்தது.
இந்திய அணியில் முக்கியமான வீரர்கள் காயம் காரணமாக நான்காவது போட்டியில் பங்கேற்கவில்லை. இளம் படைகளைக் கொண்டு களமிறங்கிய இந்திய அணி தனது துணிச்சலான பேட்டிங் மற்றும் பெளலிங்கில் அசத்தி ஆஸ்திரேலியாவை வீழ்த்தி உள்ளது.
அதன்பின் 33 ரன்கள் முன்னிலையுடன் தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி 294 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்தியா தரப்பில் முகமது சிராஜ் 5 விக்கெட்டுகளையும், தாகூர் 4 விக்கெட்டுகளையும், வாசிங்டன் சுந்தர் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
பின்னர் 327 ரன்களை இலக்காக கொண்டு களமிறங்கிய இந்திய அணி 7 ரன்களில் ரோஹித் சர்மாவின் விக்கெட்டை பறிகொடுத்தது. அதன்பின் சுபம் கில் அதிரடியாக ஆடி 91 ரன்களை சேர்த்தார். புஜாரா தன் பங்கிற்கு 56 ரன்களை எடுத்தார்.
புஜாரா அவுட் ஆன பின் அதிரடியாக ஆடி வந்த பண்ட் 80 ரன்களை கடந்து இந்தியாவை வெற்றியை நோக்கி கொண்டு சென்றார். இடையில் களமிறங்கிய வாஷிங்க்டன் சுந்தர் 22 ரன்களை அதிரடியாக எடுக்க இந்திய அணி 329 ரன்களை எடுத்து திரில்லிங் வெற்றிபெற்றது.
இப்படி அனுபவம் இல்லாத வீரர்களுடன் களமிறங்கியும் கப்பா மைதானத்தில் ஆஸ்திரேலியாவை இந்தியா வீழ்த்தி வெற்றிபெற்றுள்ளது. கடந்த 33 வருடமாக கப்பாவில் ஆஸ்திரேலியா தோல்வி அடைந்தது இல்லை என்ற சாதனையை இந்தியா முறியடித்து வென்றுள்ளது. இந்திய அணியில் இருக்கும் இளம் வீரர்கள் மட்டுமே இந்த வெற்றிக்கு காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.