Inspector Rishi Review: ஜே எஸ் நந்தினி இயக்கத்தில் நவீன் சந்திரா, சுனைனா, குமரவேல் என பல பேர் நடித்திருக்கும் வெப் சீரிஸ் தான் இன்ஸ்பெக்டர் ரிஷி. திகில், அமானுஷ்யம் கலந்து எடுக்கப்பட்ட இந்த சீரிஸ் 10 எபிசோடுகளாக வெளிவந்துள்ளது.
ஆரம்பத்திலேயே திகில் கிளப்பும் ட்விஸ்ட் வைத்து அடுத்தடுத்த எபிசோடுகளுக்கான ஆர்வத்தை ஏற்படுத்தி இருக்கிறார் இயக்குனர். 20 வருடங்களுக்கு முன்பு மலை கிராமத்தில் இருக்கும் மக்கள் ஒரு பெரிய பள்ளத்தில் நெருப்பு மூட்டி கூட்டாக சேர்ந்து தற்கொலை செய்து கொள்கின்றனர்.
அதைத்தொடர்ந்து வனரட்சியின் மாஸ் என்ட்ரி காட்டப்படுகிறது. அடுத்து நிகழ்காலத்தில் அந்த ஊரில் இருக்கும் பல பேர் மர்மமான முறையில் உயிரிழக்கின்றனர்.
அந்த கேசை விசாரிப்பதற்காக வருகிறார் இன்ஸ்பெக்டர் ரிஷி. அவர் சந்திக்கும் மர்மங்களும், வனரட்சி உண்மைதானா? பேய் இருக்கிறதா? அல்லது மனிதர்களின் வேலையா? இல்லை அறிவியலா? போன்ற பல கேள்விகளுக்கு விடையளிக்கிறது இந்த சீரிஸ்.
பேயாட்டம் போடும் வனரட்சி
வழக்கமான பேய் கதையாக இல்லாமல் வித்தியாசமாக பயமுறுத்தி இருக்கிறது இந்த கதை. அதனாலேயே அடுத்து என்ன நடக்கும் என்ற ஆவலும் ஏற்பட்டு விடுகிறது.
அதேபோல் இது அமானுஷ்யம் இல்லை என கடைசி வரை நம்பும் ஹீரோ உண்மையை புத்திசாலித்தனமாக கண்டறிகிறார். அதிலும் வனரட்சியை அவர் சந்திக்கும் காட்சிகளும் அதன் பிறகு நடக்கும் காட்சிகளும் பயங்கரமாக உள்ளது.
ஏற்கனவே இது போன்ற பல வெப் சீரிஸ்கள் நம் கவனத்தை ஈர்த்துள்ளது. அந்த வரிசையில் இந்த இன்ஸ்பெக்டர் ரிஷியும் இடம் பிடித்துள்ளார்.
பிணங்களை சுற்றி பின்னப்படும் சிலந்தி வலை, ஹீரோவுக்கு இருக்கும் மன ரீதியான பிரச்சனை, வனத்தின் மர்மம், அமானுஷ்யம் என நிச்சயம் பார்த்து ரசிக்கக்கூடிய வெப் சீரிஸ் தான் இது.
அந்த வகையில் அமேசான் ப்ரைமில் வெளியாகி இருக்கும் இத்தொடர் தற்போது அதிக கவனம் ஈர்த்துள்ளது.