இந்த ஆண்டு நடைபெற்ற 20 ஓவர் உலக கோப்பை போட்டியில் இந்திய அணி படுதோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறியது. பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான போட்டியில் ஏற்பட்ட தோல்வியிலிருந்து மனதளவில் இன்னும் இந்திய வீரர்கள் வெளிவரவில்லை. அதற்குள் நியூசிலாந்து தொடர் ஆரம்பித்துவிட்டது.
உலகக் கோப்பை தோல்விக்கு முக்கிய காரணமாக ஐபிஎல் போட்டிகளை தான் கூறுகின்றனர். ஐபிஎல் போட்டிகள் கொரோன காரணமாக முதல்பாதி அதன் பின் இரண்டாம் பாதி என நடத்தப்பட்டது. ஐபிஎல் போட்டிகளில் இந்திய வீரர்கள் தொடர்ந்து ஆடியதால் சோர்வு அடைந்துவிட்டதாகவும், அதனால் உலகக் கோப்பை போட்டிகளில் சரியாக ஆட முடியவில்லை என்று விமர்சனங்கள் வைக்கப்பட்டது.
ஜஸ்பிரித் பும்ரா போன்ற வீரர்கள் கூட பயோ பபுள் விதிமுறைகளை பின்பற்றுவதால் வீரர்கள் மனதளவில் சோர்வடைந்து விட்டதாகவும். வீரர்களுக்கு ஓய்வு வேண்டுமென்றும் தெரிவித்திருந்தனர். இதன் காரணமாக ஐபிஎல் போட்டிகளை தடை செய்ய வேண்டும் என்று கூட செய்திகள் வந்தன.
இந்நிலையில் இதைப் பற்றி பேசிய இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி ஐபிஎல் போட்டிகளை தடை செய்ய முடியாது என்றும், ஐபிஎல் போட்டிகளில் வரும் பணத்தை வைத்து பிசிசிஐ கிரிக்கெட் போட்டிகளின் தரத்தை மேம்படுத்த முடியும். அது மட்டுமின்றி பல வீரர்களை இந்திய அணிக்காக உருவாக்க முடியும். நிலையான வருமானம் வேண்டுமென்றால் சில விஷயங்களை தியாகம் செய்தாக வேண்டுமென்று கூறியுள்ளார்.