தமிழ் சினிமாவில் நடிகர் அஜித் முதன்முறையாக இரண்டு வேடங்களில் நடித்து அசத்திய வாலி படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் தோன்றியதன் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை ஜோதிகா. இதனையடுத்து நடிகர் சூர்யாவுடன் இணைந்து பூவெல்லாம் கேட்டுப்பார் எனும் படத்தில் நடித்ததன் மூலம் நாயகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். முதல் படமே அமோக வரவேற்பை பெற்றதால் தொடர்ந்து அடுத்தடுத்து படங்களில் நடிக்க ஒப்பந்தமானார்.
தனது அசாத்திய நடிப்பால் வெகுவிரைவிலேயே தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகள் பட்டியலில் இணைந்தார். தளபதி விஜயுடன் இணைந்து இவர் நடித்திருந்த குஷி படம் மாபெரும் வெற்றி பெற்றது. படத்தில் ஜோதிகாவின் நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது. இவரது எக்ஸ்பிரஷன்ஸ்காகவே இவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருந்தனர். இவரது மார்க்கெட் உச்சத்தில் இருந்த சமயத்தில் நடிகர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
பின்னர் குழந்தைகள், குடும்பம் என செட்டிலான ஜோதிகா நீண்ட காலம் சினிமாவை விட்டு விலகி இருந்தார். அதன் பிறகு 36 வயதினிலே என்ற படம் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவில் ரீஎன்ட்ரீ கொடுத்தார். ஒரு சில நடிகைகளுக்கு மட்டுமே கம்பேக் கைகொடுக்கும். அந்த வகையில் ஜோதிகா தனது ரீ என்ட்ரியை திறமையாக கையாண்டு வருகிறார் என்று தான் கூறவேண்டும். இவர் தேர்வு செய்யும் அனைத்து படங்களுமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
அந்த வரிசையில் ஜோதிகா நடிப்பில் வெளியான காற்றின் மொழி, ஜாக்பாட், பொன்மகள்வந்தாள், நாச்சியார், ராட்சசி உள்ளிட்ட அனைத்து படங்களும் மாபெரும் வெற்றி பெற்றன. நடிகர்களுக்கு இணையாக இவரது படங்கள் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. இதில் ஜோதிகா நடிப்பில் கடந்த 2019ஆம் ஆண்டு வெளியான ராட்சசி படம் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளது.
கௌதம்ராஜ் இயக்கத்தில் வெளியாகி நல்ல விமர்சனங்களைப் பெற்ற ராட்சசி படத்தின் ஹிந்தி டப்பிங் உரிமையை கோல்ட் மைன்ஸ் பிலிம்ஸ் வாங்கியது. இதனையடுத்து மேடம் கீதா ராணி என்ற பெயரில் ராட்சசி படம் ஹிந்தியில் டப் செய்யப்பட்டு வெளியானது. இந்நிலையில் தற்போது இப்படம் யூடியூபில் சுமார் 200 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது. அப்படி எனில் 20 கோடிமுறை இப்படம் பார்க்கப்பட்டிருக்கிறது. இதுவொரு புதிய சாதனையாக பார்க்கப்படுகிறது.

Madam Geeta Rani (Raatchasi) Full movie
பொதுவாக விஜய், அஜித் போன்ற முன்னணி நடிகர்களின் ஹிந்தி டப்பிங் படங்கள் மட்டுமே இது போன்ற அதிக பார்வைகளை கடந்து சாதனை படைக்கும். ஆனால் முதல்முறையாக ஒரு நடிகையின் படம் இதுபோன்ற சாதனை படைத்துள்ளது. அதுவும் தமிழில் சுமாரான வெற்றி பெற்ற ராட்சசி படம் இந்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.