தமிழ் சினிமாவின் பிரபல நடிகையும், நடிகர் சூர்யாவின் மனைவியுமான நடிகை ஜோதிகா தற்போது தனது இரண்டாவது இன்னிங்சில் வெற்றிகரமாக நடித்துக் கொண்டிருக்கிறார். திருமணத்திற்குப் பிறகு நீண்ட இடைவெளி எடுத்திருந்த நடிகை ஜோதிகா தற்போது அடுத்தடுத்து புதிய படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.
தற்போது நடிகை ஜோதிகா இயக்குனர் சரவணன் இயக்கத்தில் சூர்யா தயாரிப்பில் உடன்பிறப்பே என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் சசிகுமார், சமுத்திரகனி, சூரி, வேல ராமமூர்த்தி உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
கடந்த ஆண்டு விருது விழா ஒன்றில் பங்கேற்ற நடிகை ஜோதிகா,” கோவில்களை அரண்மனை போல் பராமரிக்கிறீர்கள், நிறைய செலவு செய்கிறீர்கள். அதேபோல் அரசு மருத்துவமனைகளுக்கும், அரசுப் பள்ளிகளுக்கும் செலவு செய்யலாமே” என கூறியிருந்தார். நடிகை ஜோதிகாவின் பேச்சு மிகுந்த சர்ச்சைக்குள்ளானது. பல்வேறு தரப்பினரும் ஜோதிகாவுக்கு எதிராக கருத்து தெரிவித்தனர்.
இந்நிலையில் ஜோதிகாவின் கருத்து குறித்து இயக்குநர் இரா.சரவணன் தனது முகநூல் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ”தஞ்சாவூர் அரசு ராசா மிராசுதார் மருத்துவமனை அருகே படப்பிடிப்பு நடைபெற்றது. அப்பொழுது, குழந்தை பிறந்த அடுத்த நாள் தாயை, மருத்துவமனையின் வெளியில் அமர வைத்த சம்பவம் ஜோதிகாவை மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதுகுறித்த ஆதங்கத்தை தான் அவர் பதிவு செய்தார்.
மேலும் அந்த மருத்துவமனைக்கு அவர் ரூ.25 லட்சம் நிதியுதவி வழங்கினார். ஜோதிகாவின் பேச்சு எதிரொலியால் தான் தமிழக அரசு அந்த மருத்துவமனைக்கு நிதி ஒதுக்கியது. மருத்துவமனையைச் சுற்றி இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. மருத்துவ வளாகத்தை சுத்தப்படுத்திய போது பாம்புகள் பிடிக்கப்பட்டன. இதெல்ல்லாம் நடிகை ஜோதிகாவின் பேச்சால் நிகழ்ந்த மாற்றங்கள்” என்று பதிவு செய்துள்ளார்.
நடிகை ஜோதிகா கூறியதால் தற்போது ஆக்கிரமிப்புகள் நிறைந்த அரசு மருத்துவமனை ஒன்று புத்துயிர் பெற்றுள்ளது அப்பகுதி மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் ஜோதிகாவை பலரும் பாராட்டி வருகிறார்கள்.