தமிழ் சினிமாவில் ரஜினி – கமல், விஜய் – அஜித், விக்ரம் – சூர்யா என அடுத்தடுத்த தலைமுறை ஹீரோக்கள் உருவாவது போல் காமெடி நடிகர்களும் உருவாகி கொண்டுதான் இருக்கிறார்கள். அந்த வரிசையில் கவுண்டமணி – செந்தில், வடிவேலு – விவேக் இவர்களைத் தொடர்ந்து தற்போது முன்னணி காமெடி நடிகராக வலம் வருபவர் யோகி பாபு. இவருக்கு அடுத்தபடியாக இருப்பவர்தான் நடிகர் காளி வெங்கட். இவர் காமெடி மட்டுமின்றி குணச்சித்திர வேடங்களிலும் தனது அபாரமான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார்.
இவர் அறிமுகமான படம் முதல் தற்போது வரை இவர் நடிப்பில் வெளியான அனைத்து படங்களுமே நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. அந்த வரிசையில் தெகிடி, முண்டாசுப்பட்டி, இறுதிச்சுற்று சமீபத்தில் வெளியான சார்பட்டா பரம்பரை உட்பட அனைத்து படங்களுமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. அதேபோல் காளி வெங்கட்டின் நடிப்பும் ரசிகர்கள் மத்தியில் பாராட்டை பெற்று வருகிறது.
காளி வெங்கட் தற்போது லாரன்ஸின் ருத்ரன், சிவகார்த்திகேயனின் டான், பெயரிடப்படாத சாய் பல்லவியின் படம் என பல படங்களில் பிஸியாக நடித்துவருகிறார். இந்நிலையில் இவரிடம் சென்னை தினத்தையொட்டி சென்னையில் மிகவும் பிடித்த இடம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதிலளித்த காளி வெங்கட், எனக்கு உணவளித்த கலா அக்கா வீடுதான் எனக்கு மிகவும் பிடித்த இடம் என கூறியுள்ளார். மேலும் தொடர்ந்து பேசிய காளி வெங்கட், “சினிமா ஆசையுடன் 1998ஆம் ஆண்டு 15 வயதில் நான் சென்னை வந்தபோது முதலில் திருவொற்றியூரில் ஒரு மளிகை கடையில் வேலை செய்து வந்தேன். அப்போது கடையை மூடிய பிறகே சாப்பிட முடியும்.
அந்த சமயத்தில் என்னை உரிமையோடு கூப்பிட்டு உணவளித்தவர் தான் கடைக்கு எதிர்வீட்டில் வசித்த கலா அக்கா. சாப்பாடு என்றால் இறால், மீன், மட்டன் என்று விதவிதமாக இருக்கும். கலா அக்காவின் பிள்ளைகள் வெளிநாட்டில் இருந்த நிலையில் என்னை ஒரு பிள்ளை போல் அவர் பார்த்துக் கொண்டார். சென்னையின் அடையாளமே கலா அக்கா போன்ற வெள்ளந்தி மக்கள்தான்” என கூறியுள்ளார்.
மேலும், தற்போது கலா அக்கா திருவொற்றியூரில் இல்லை. அவரை தேடிக் கொண்டிருக்கிறேன். முகவரி கிடைக்கவில்லை. விரைவில் கண்டுப்பிடித்து கலா அக்காவை பார்த்துவிடுவேன் என்ற நம்பிக்கை உள்ளது என காளி வெங்கட் கூறியுள்ளார்.