தமிழ் சினிமாவில் ரஜினி, கமல் இருவரும் உச்ச நட்சத்திரங்களாக இருக்கின்றனர். இவர்கள் இருவருக்கும் ஏராளமான ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது. தொழில் ரீதியாக இவர்களுக்குள் போட்டி இருந்தாலும் நிஜத்தில் கமல், ரஜினி இருவரும் நெருங்கிய நண்பர்களாக நட்புடன் பழகி வருகின்றனர்.
இந்நிலையில் பிரபல இசையமைப்பாளர் தேவா, கமல் ரசிகர் ஒருவர் ரஜினியின் காலில் விழுந்து வணங்கிய சம்பவத்தைப் பற்றி தெரிவித்துள்ளார். ரஜினியின் நடிப்பில் மாபெரும் வெற்றி பெற்ற பாட்ஷா திரைப்படத்திற்கு தேவா இசையமைத்திருந்தார்.
அப்போது பாடல் சம்பந்தமாக ஒரு நாள் ரஜினி ரெக்கார்டிங் ரூமிற்கு வந்துள்ளார். அங்கு வேலையை முடித்துவிட்டு ரஜினி திரும்பி செல்லும் சமயத்தில் வாசலில் ஒரு ஆட்டோ டிரைவர் கையில் மாலையோடு நின்றுள்ளார். ரஜினி அங்கு வருவதை கண்ட அந்த ஆட்டோக்காரர் உடனே அவருக்கு மாலை அணிவித்து பின் அவரின் காலில் விழுந்து வணங்கி இருக்கிறார்.
இதை பார்த்த தேவா பிறகு ரஜினியிடம் தனியாக அவர் யார் உங்கள் ரசிகரா என்று கேட்டிருக்கிறார். அதற்கு ரஜினி இல்லை அவர் கமல் ரசிகர் என்று கூறியிருக்கிறார். மேலும் ரஜினி சினிமா வாய்ப்பு தேடி கொண்டிருந்த சமயத்தில் அந்த ஆட்டோ டிரைவர் ரஜினி தங்கியிருந்த அறைக்கு பக்கத்து அறையில் தங்கியிருந்துள்ளார்.
ரஜினிக்கு முன்பே சினிமாவில் நடிக்க ஆரம்பித்து இருந்த கமலுக்கு அவர் தீவிர ரசிகராக இருந்துள்ளார். பிறகு ரஜினி சினிமாவில் நுழைந்து முன்னணி நடிகராக மாறினார். அப்போது அவர் நடித்த முள்ளும் மலரும் திரைப்படத்தில் கிடைத்த சம்பளத்தில் அந்த கமல் ரசிகருக்கு ஒரு ஆட்டோ வாங்கி கொடுத்துள்ளார்.
அதன் காரணமாகத்தான் அவரின் ஒவ்வொரு பிறந்த நாளின்போதும் ரஜினிக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார் என்று தேவா கூறியுள்ளார். பல வருடங்களுக்கு முன்பு நடந்த இந்த விஷயத்தை தேவா தற்போது ரசிகர்களுக்கு தெரிவித்துள்ளார்.