வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

மீண்டும் தூசி தட்டப்படுமா மருதநாயகம்.. வெளிப்படையாக கூறிய கமல்ஹாசன்

கமல்ஹாசன் தற்போது சில வருட இடைவெளிக்குப் பிறகு நடித்துள்ள விக்ரம் திரைப்படம் பல கோடி அளவில் வசூலை வாரி குவித்து வருகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்த திரைப்படத்திற்கு பிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை அனைவரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

அந்த அளவிற்கு பலரையும் கவர்ந்துள்ள விக்ரம் திரைப்படத்தின் அடுத்த பாகம் விரைவில் ஆரம்பிக்கப்பட வேண்டும் என்று ரசிகர்கள் கமலுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் கமல் இந்த திரைப்படத்தின் வெற்றியை தற்போது தன்னுடைய படக்குழுவினருடன் கொண்டாடி வருகிறார்.

அதுகுறித்த வீடியோக்கள், போட்டோக்கள் என்று வெளியான நிலையில் ஒரு பேட்டியில் கமலிடம் அவரின் கனவு திரைப்படமான மருதநாயகம் மீண்டும் ஆரம்பிக்கப்படுமா என்று கேட்கப்பட்டது. பல வருடங்களுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்ட இந்த திரைப்படம் சில பொருளாதார நெருக்கடிகளால் பாதியிலேயே கைவிடப்பட்டது.

ஆனாலும் இந்தத் திரைப்படத்தின் மீதான ஆர்வம் ரசிகர்களுக்கு இன்று வரையில் குறைந்தபாடில்லை. எப்படியாவது கமல் அந்த திரைப்படத்தை மீண்டும் ஆரம்பிக்க வேண்டும் என்பதுதான் பலரின் ஆசையாக இருக்கிறது. ஆனால் வருடங்கள் கடந்து விட்ட காரணத்தினால் கமல் அந்த திரைப்படத்தை மீண்டும் இயக்கும் நிலையில் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் நான் ஒவ்வொரு திரைப்படத்திலும் பல புதுமையான விஷயங்களை ரசிகர்களுக்கு கொடுக்க வேண்டும் என்று நினைக்கிறேன். அந்த வகையில் நான் பல வருடமாக பார்த்து வந்த மருதநாயகம் இப்போது எனக்கு பழைய படமாக தெரிகிறது. அதனால் எனக்கு சற்று ஆர்வம் குறைந்துள்ளது.

ஆனால் அதற்கான சரியான குழு எனக்கு கிடைத்தால் அது பற்றி யோசிக்கலாம். ஏனென்றால் என்னால் தனியாக அதை செய்வது முடியாத விஷயம் என்று கூறியுள்ளார். இதனால் மருதநாயகம் திரைப்படம் வெளி வருவது சந்தேகம்தான் என்று தெரிகிறது. ஒருவேளை கமல் கூறியது போன்று சரியான டீம் அமைந்தால் இந்த படம் வெளிவருவது சாத்தியமாகலாம்.

Trending News