லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலகநாயகன் கமலஹாசன், விஜய்சேதுபதி, பகத் பாசில் நடித்திருக்கும் விக்ரம் திரைப்படம் கடந்த ஜூன் 3-ம் தேதி திரையரங்கில் ரிலீஸ் ஆகி வசூல் வேட்டை ஆடிக் கொண்டிருக்கிறது. இந்தப் படத்தை உலக அளவில் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
அதற்கேற்ப அந்தப் படத்தின் வசூலும் எங்கேயோ சென்றுவிட்டது. நான்கு வருடங்களுக்குப் பிறகு கமல், லோகேஷ் கனகராஜ் உடன் இணைந்து கொடுத்த பிளாக்பஸ்டர் இது. இந்நிலையில் லைக்கா தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டான் திரைப்படம் கடந்த மே 13 ஆம் தேதி ரிலீஸ் செய்யப்பட்டு ரசிகர்களிடையே ஏகபோக வரவேற்ப்பை பெற்று, அந்தப் படத்தின் வெற்றி விழாவை லைக்கா நிறுவனம் கொண்டாடி வருகின்றது.
இந்த நேரத்தில் விக்ரம் படத்தை பார்த்து வியந்து போன லைக்கா புரொடக்ஷன்ஸ் ஒரு பெரிய ஸ்கெட்ச் போட்டு உள்ளதாம். இதுதான் நேரம் இந்த நேரத்தை விட்டால் பிடிக்க முடியாது. அதனால் கமலின் நின்றுபோன படமான இந்தியன் 2-வை டேக் ஆஃப் செய்யும் முனைப்பில் இறங்கியுள்ளது.
என்ன பிரச்சினையாக இருந்தாலும் பரவாயில்லை. அதை சரி செய்து இந்தியன் 2 படத்தை எடுத்தே தீர வேண்டும் என்று களத்தில் இறங்கி உள்ளது லைக்கா நிறுவனம். விக்ரம் படத்தின் சாதனையை முறியடிக்க வேண்டுமானால் ஷங்கர் கமலை வைத்து இயக்கவிருக்கும் பிரம்மாண்ட படம் ஆகிய இந்தியன்-2 வால் மட்டுமே முடியும்.
ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தில் கமல்ஹாசன், காஜல் அகர்வால், சித்தார்த், ரகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஏற்கனவே ஒப்பந்தமாகி இருந்த நிலையில், இந்த படத்தின் படப்பிடிப்பின்போது 2020 ஆம் ஆண்டில் பிப்ரவரி 19-ம் தேதி அன்று இரவு நேரத்தில் சென்னை அருகே உள்ள தனியார் ஸ்டுடியோவில் அமைக்கப்பட்ட படப்பிடிப்புத் தளத்தில் ஏற்பட்ட விபத்தில் மூன்று நபர் உயிரிழந்ததை தொடர்ந்து, அந்தப் படம் அதன் பிறகு தொடராமல் கிடப்பில் போடப்பட்டது.
இந்த விபத்தில் உயிரிழந்த மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு லைக்கா நிறுவனம் 2 கோடியும், கமலஹாசன் 1 கோடியும், இயக்குனர் ஷங்கர் 1 கோடியும் நிவாரணம் வழங்கினாலும், மேற்கொண்டு படத்தை எப்போது துவங்குவார்கள் என யாருக்குமே தெரியாமல் இருந்தது. ஆனால் தற்போது விக்ரம் படத்திற்குப் பிறகு இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பை மீண்டும் துவங்கலாம் என்று லைக்கா நிறுவனம் முடிவெடுத்திருப்பதாக தெரிகிறது. அதனால் இந்தியன் 2 கூடிய விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.