Indian 2 Movie Review: கடந்த 1996 ஆம் ஆண்டு கமல், சங்கர் கூட்டணியில் வெளிவந்த இந்தியன் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல் கொண்டாடப்பட்டது. அதில் இந்தியனுக்கு சாவே இல்லை என சேனாபதி தாத்தா சொல்வதோடு முதல் பாகம் முடிந்திருக்கும்.
அதை தொடர்ந்து ஏழு வருட போராட்டத்திற்கு பிறகு இந்தியன் 2 வெளியாகியுள்ளது. மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இப்படம் தற்போது கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இதற்கு என்ன காரணம்? படத்தின் கதை என்ன? என்பது பற்றி இங்கு விரிவாக அலசுவோம்.
யூடியூபர்களாக இருக்கும் சித்தார்த், ப்ரியா பவானி சங்கர், ஜெகன் ஆகியோர் இன்றைய சூழலில் நடக்கும் ஊழலை படம் பிடித்து தங்களுடைய சேனலில் வெளியிடுகிறார்கள். அதன்மூலம் சம்பந்தப்பட்ட அதிகாரியும் கைது செய்யப்படுகிறார். ஆனால் உடனே அவர் வெளியில் வருவதும் மீண்டும் ஊழல் நடப்பதும் தொடர்கதையாகிறது.
இதனால் வெறுத்துப் போகும் சித்தார்த் இந்தியன் தாத்தா மீண்டும் வரவேண்டும் என முயற்சி செய்கிறார். அதை அடுத்து பண முதலைகளுக்கு பாடம் புகட்டவும் ஊழலை ஒழிக்கவும் சேனாபதி தாத்தா மீண்டும் இந்தியா வருகிறார். அதன் பிறகு நடப்பது என்ன? இந்தியன் தாத்தா நினைத்ததை சாதித்தாரா? போன்ற பல கேள்விகளுக்கு விடை அளிக்கிறது இந்த இரண்டாம் பாகம்.
முழு விமர்சனம்
ட்ரெய்லரிலேயே கதையின் கரு நமக்கு தெரிந்து விட்டதால் பெரிய ட்விஸ்ட் ஒன்றும் படத்தில் இல்லை. இதில் வழக்கம் போல கமலின் நடிப்பு நம்மை பிரம்மிக்க வைக்கிறது. ஆனால் தாத்தாவுக்கான மேக்கப் தான் கொஞ்சம் பொருந்தவில்லையோ என நினைக்க வைக்கிறது.
இவருக்கு அடுத்தபடியாக சித்தார்த், பாபி சிம்ஹா இருவருக்கும் முக்கிய கேரக்டர்கள் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதை அவர்கள் புரிந்து கொண்டு தங்களுடைய சிறப்பை கொடுத்திருக்கின்றனர். அதேபோல் ரகுல் பிரீத் சிங், சமுத்திரக்கனி, ப்ரியா பவானி சங்கர் ஆகிய கதாபாத்திரங்களும் தங்களுக்கான வேலையை செய்து இருக்கின்றனர்.
இதில் உலகநாயகனுடன் முதலும் கடைசியுமாக நடித்துள்ள விவேக் ஒரு தாக்கத்தை ஏற்படுத்துகிறார். நகைச்சுவையோடு கருத்தும் சொல்லக்கூடிய இந்த கலைஞனை இழந்து விட்டோமே என்ற மெல்லிய சோகமும் ஏற்படுகிறது.
அடுத்ததாக வில்லன் எஸ் ஜே சூர்யா சில காட்சிகளில் மட்டுமே வருகிறார். அவருக்கு மூன்றாம் பாதியில் மிகப்பெரும் வேலை இருக்கிறது. மேலும் சங்கர் படம் என்று சொல்வதற்கு ஏற்ப பிரம்மாண்டம் கொட்டி கிடக்கிறது. ஆனால் ஏதோ ஒன்று மிஸ்ஸிங் என்ற உணர்வும் தோன்றுகிறது.
இதற்கு முக்கிய காரணம் யூகிக்கக்கூடிய திரைக்கதை தான். பொதுவாக அவருடைய படங்களில் தற்போதைய அரசியலை ஆழமான வசனங்கள் மற்றும் காட்சிகளின் வழியாக காட்டியிருப்பார். ஆனால் இதில் பட்டும் படாமல் காட்டி இருப்பது பெரும் குறை.
அனிருத்தின் இசையை பொருத்தவரையில் சிறப்பாக இருந்தாலும் ஏ ஆர் ரகுமான் தான் மனதின் ஓரம் வந்து செல்கிறார். ஒருவேளை அவர் இருந்திருந்தால் இன்னும் அனல் பறந்திருக்கலாம்.
இறுதியாக இந்தியன் 3 ட்ரெய்லர் திரையரங்கை அதிர வைத்துள்ளது. அதில் சேனாதிபதியின் தந்தையாக வரும் வீரசேகரன் அவருக்கு ஜோடியாக காஜல் அகர்வால் என எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. ஆக மொத்தம் ஏழு வருடமாக உருவான இந்தியன் 2 திரைகதையில் லாஜிக் இல்லாத காட்சிகளால் தடுமாறி இருக்கிறது.
சினிமா பேட்டை ரேட்டிங்: 3.25/5