பிரபல நடிகர் டெல்லி கணேஷ் வயது முதிர்வு மற்றும் உடல் நலக்குறைவால் இன்று காலமானார். அவரது மறைவு திரைத்துறையினர் மற்றும் ரசிகர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விமானப் படையில் இருந்து சினிமாவுக்கு வந்த கணேஷன்
சினிமாவில் எத்தனையோ நடிகர்கள் இருக்கின்றனர். ஆனால் தான் நடிக்கும் படங்களில் ஒரு சிறிய கேரக்டர் கிடைத்தாலே அதில் ஸ்கோர் செய்யும் அற்புத கலைஞர்தான் டெல்லி கணேஷ். படித்து முடித்த பின் 1964 ஆம் ஆண்டு முதல் 1974 ஆம் ஆண்டு வரை இந்திய விமானப்படையில் பணியாற்றினார். அதன்பின், நடிப்பின் மீதான ஆர்வத்தால் நாடக நடிகராக இருந்த அவர், தக்ஷிண பாரத நாடக சபா எனப்படும் டெல்லி நாடகக் குழுவில் உறுப்பினராகவும் இருந்தார்.
அதன்பின் சினிமாவில் மீதிருந்த ஈடுபாட்டால் கடந்த 1976 ஆம் ஆண்டு சினிமாவில் நுழைந்தார். இவரை தமிழ் சினிமாவில் அறிமுகம் செய்தவர் கே. பாலச்சந்தர். டெல்லி கணேஷ் நடிப்பில் வெளியான முதல் படம் பட்டிணப்பிரவேசம். டெல்லி கணேஷ் மிகச்சரியாகப் பயன்படுத்திய நடிகர் கமல்ஹாசன் தான். அவரது பெரும்பாலான படங்களில் டெல்லி கணேஷுன் திறமைக்கு தீனி போடும் கேரக்டர்கள் கொடுத்திருப்பார்.
குறிப்பாக, அபூர்வ சகோதரர்கள், நாயகன், மைக்கேல் மதன காமராஜன். தெனாலி, அவ்வை சண்முகி, இந்தியன் 2, ஆகிய படங்களிலும் கவனம் ஈர்த்தார். அதேபோல் விசுவின் சம்சாரம் அது மின்சாரம், அவள் சுமங்கலி தான், சிதம்பர ரகசியம் என பல படங்களில் நடிப்பார் ரசிகர்களை கவர்ந்தார் டெல்லி கணேஷ்.
இதில், மணிவாசகத்தின் பட்டத்து ராணி படத்தில் வரும் குடித்தவாசி வேடமும், பட்ஜெட் பத்ம நாபன் படத்தில் வரும் பொறுப்பில்லாத தந்தையின் வேடமும், இருப்புத்திரை படத்தில் வரும் கடன் வாங்கியே காலத்தை ஓட்டிய வேடமும் அக்கதாப்பாத்திரத்துக்கு அவரை விட்டால் வேறு யாரும் பொருந்த முடியாது என்பதை தத்ரூபமாக நடிப்பால் வெளிக்கொணர்ந்தவர் டெல்லி கணேஷ்.
திரைப்பட விருதுகள்
தூத்துக்குடியில் பிறந்த அவர், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வில்லன், குணச்சித்திர வேடம், துணைக்கேரக்டர்கள், டப்பிங் கலைஞராகவும் ஜொலித்த அவர் 400 திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் 8 முக்கிய சின்னத்திரை தொடர்களிலும் நடித்திருந்தார். இவர், பசி என்ற படத்தில் நடித்ததற்காக கடந்த 1979 ஆம் ஆண்டு தமிழக அரசின் சிறந்த நடிகருக்கான விருதை வென்றார். 1994 ஆம் ஆண்டு தமிழக அரசின் கலைமாமணி விருதையும் வென்றது குறிப்பிடத்தக்கது.
நடிகர் டெல்லி கணேஷ் மறைவு
இந்த நிலையில் சென்னை ராமாபுரத்தில் உள்ள இல்லத்தில் வசித்து வந்த டெல்லி கணேஷ், வயது முதிர்வு மற்றும் உடல் நலக்குறைவால் இன்று காலமானார். அவர் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. அவரது மறைவு திரைக்கத்துறையினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் அவருக்கு திரைத்துறையினரும், ரசிகர்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
டெல்லி கணேஷ் பெயர் எப்படி?
மேலும், டெல்லி கணேஷ் என்று எப்படி பெயர் வந்தது என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். அவர் தூத்துக்குடியைச் சேர்ந்தவர் பிறகு எப்படி, டெல்லி அடைமொழியாளது என்ற சந்தேகத்திற்கு அவரே விளக்கம் அளித்திருந்தார். ‘’சினிமாவில் அவரை அறிமுகம் செய்த இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தர், டெல்லியில் பல நாடகங்களில் நடித்திருப்பதால் டெல்லி கணேஷ் என்று பெயர் வைத்தார். அதுவே நிலைத்துவிட்டு, தனித்து தெரிகிறது’’ என்று சமீபத்திய பேட்டியில் டெல்லி கணேஷ் கூறியது குறிப்பிடத்தக்கது.