இயக்குனர் ஜீவா இயக்கிய தாம் தூம் படம் மூலமாக தமிழ் திரையுலகுக்கு அறிமுகமானவர் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத். பெரும்பாலும் இந்தியில் மட்டுமே நடித்து வந்த கங்கனா தற்போது ஏ.எல்.விஜய் இயக்கத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி உருவாகும் தலைவி என்ற படத்தில் ஜெயலலிதாவாக நடித்து முடித்துள்ளார்.
இப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது. இந்நிலையில், முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி உருவாகும் புதிய படத்தில் கங்கனா ரனாவத் நடிக்க உள்ளார். இப்படத்திற்கு எமர்ஜென்சி என பெயரிட்டுள்ளனர்.
இந்திரா காந்தி பிரதமராக இருக்கும் போது அவசரநிலையை பிரகடனம் செய்ததை சுட்டிக்காட்டும் விதமாக படத்திற்கு தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். இப்படத்தில், கங்கனா நடிப்பதோடு இயக்கவும் செய்கிறார்.
கங்கனா ஏற்கனவே ‘மணிகர்னிகா’ என்ற படத்தை இயக்கியுள்ளார். எனவே இது அவர் இயக்கும் இரண்டாவது படமாகும். படம் குறித்து பேசிய கங்கனா “படத்திற்கு திரைக்கதை அமைக்கும் பணி, கடந்த ஒரு வருடமாக நடந்தது.
அதில் நானும் கலந்து கொண்டேன். இந்த படத்தை என்னை விட சிறப்பாக வேறு யாரும் இயக்க முடியாது என்பதால், நானே இயக்குகிறேன்” என கூறினார்.