தமிழ் சினிமாவில் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான தாம் தூம் படம் மூலமாக தமிழ் ரசிகர்களுக்கு பரிச்சயமானவர் தான் பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத். இப்படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் அவர் நடிக்கவில்லை. அதன் பின்னர் தனது முழு கவனத்தையும் பாலிவுட் படங்களில் செலுத்திய கங்கனா தற்போது அங்கு முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா எப்படியோ அதேபோல் பாலிவுட்டில் கங்கனா ரனாவத். சோலோ கதாநாயகி படங்களில் மட்டுமே நடித்து வருகிறார். இது வரை பாலிவுட்டில் மட்டுமே நடித்து வந்த கங்கனா, தற்போது தனது கவனத்தை மெல்ல தமிழ் சினிமா பக்கம் திரும்ப்பியுள்ளார். அதன் விளைவாக தற்போது இவர் நடிப்பில் வெளியாகியுள்ள தமிழ் படம் தான் தலைவி.
இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கியுள்ள இப்படத்திற்கு பிரபல தெலுங்கு இயக்குனர் ராஜமௌலியின் தந்தை கே.வி.விஜயேந்திர பிரசாத் கதை எழுதியுள்ளார். விஷ்ணுவர்தன் இந்தூரி, சைலேஷ் ஆர்.சிங் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளார்கள். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இப்படம் தமிழ் மற்றும் ஹிந்தி மொழிகளில் உருவாகியுள்ளது.
இந்நிலையில் இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பில் பேசிய கங்கனா ரனாவத் கூறியதாவது, “நான் அரசியல்வாதி அல்ல; ஆனால், பொறுப்பான குடிமகளாக என் நாட்டுக்காகக் குரல் கொடுக்கிறேன். நான் அரசியலில் நுழைவது பற்றி கேட்கிறீர்கள். அதற்கு மக்களின் ஆதரவு தேவை.
வருங்காலத்தில் மக்கள் என்னை விரும்பி, எனக்கு ஆதரவு அளித்தால் அரசியலில் நுழைய ஆர்வமாக உள்ளேன். ‘தலைவி’ படம் சர்ச்சை எதையும் உருவாக்கவில்லை. அதற்காக இயக்குனரை பாராட்ட வேண்டும். ஆளுங்கட்சிக்கு கூட படத்தில் எவ்வித பிரச்னையும் இல்லை” என கூறினார்.
கங்கனா பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வந்தாலும், சர்ச்சைக்கு பெயர் போன நடிகையாகவும் திகழ்ந்தார். அவ்வப்போது சர்ச்சைக்குரிய கருத்துக்களை அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தி வருவார். தற்போது இவர் நடிப்பில் வெளியாகியுள்ள தலைவி படம் எந்தவித சர்ச்சையையும், விமர்சனங்களையும் சந்திக்காமல் இருப்பது ஆச்சரியமாகவே உள்ளது என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.