துல்கர் சல்மான் மற்றும் விஜய் டிவி பிரபலம் ரக்ஷன் ஆகியோர் நடிப்பில் கடந்த வருடம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் இயக்குனர் தேசிங்கு பெரியசாமிக்கு விரைவில் திருமணம் நடக்க உள்ளதாம்.
யாரும் எதிர்பார்க்காத வகையில் மிகக் குறைந்த பட்ஜெட்டில் உருவாகி பெரிய வெற்றியை வாரிக் குவித்த திரைப்படம்தான் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால். குறைந்த பட்ஜெட்டில் உருவாகி கிட்டத்தட்ட 50 கோடி வசூலை எட்டியது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தை பார்த்துவிட்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தே வியந்து போய் தேசிங்கு பெரியசாமியை பாராட்டி தனக்காக ஒரு கதை எழுதும் படி கேட்டுக் கொண்டார் என்ற ஆடியோகூட வெளியாகி வைரல் ஆனது.
இந்நிலையில் இந்த படத்தை இயக்கிய தேசிங்கு பெரியசாமி அதே படத்தில் இரண்டாவது கதாநாயகியாக நடித்த நிரஞ்சனி என்பவரை திருமணம் செய்ய உள்ளாராம். நிரஞ்சனி பிரபல இயக்குனர் அகத்தியனின் மகள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தில் விஜய் டிவி பிரபல ரக்சனுக்கு ஜோடியாக நடித்தவர் தான் நிரஞ்சனி. மேலும் இது காதல் திருமணம் இல்லையாம். முழுக்க முழுக்க பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்டு நடத்தப்படும் திருமணமாம்.
இவர்கள் திருமணம் வருகிற பிப்ரவரி 25-ஆம் தேதி பாண்டிச்சேரியில் நடைபெற உள்ளதாகவும், பின்னர் சென்னையில் ஒரு பெரிய விருந்து விழா ஏற்பாடு செய்ய இருப்பதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன. தேசிங்கு பெரியசாமி அடுத்ததாக சிவகார்த்திகேயன் அல்லது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆகிய இருவரில் ஒருவரை வைத்து படம் இயக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.