தனுஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி ஏப்ரல் 9ம் தேதி வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ள திரைப்படம் கர்ணன். கர்ணன் படத்தை பார்த்த பலரும் புல்லரித்து பாராட்டி வருகின்றனர்.
கர்ணன் படத்தின் ஒவ்வொரு காட்சியும் ரசிகர்களை மெய்சிலிர்க்க வைப்பதாகவும், படத்தின் கதையோட்டம் ரசிகர்களை பெருமளவு படத்துடன் ஒன்றவைத்து விடுகிறது எனவும் கர்ணன் விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றன.
மேலும் தனுஷின் சினிமா கேரியரில் இதுவரை இல்லாத அளவுக்கு கர்ணன் திரைப்படத்தின் முதல் நாள் வசூல் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் திடீரென கொரானா அதிகமாகிக் கொண்டே இருப்பதால் தமிழகத்தில் மீண்டும் 50 சதவீத பார்வையாளர்கள் மட்டுமே திரையரங்குகளில் அனுமதிக்கப்பட வேண்டும் என்ற சட்டம் அவசரஅவசரமாக நிறைவேற்றப்பட்டது.
இதன் காரணமாக முதல் நாள் 100 சதவீத பார்வையாளர்களுடன் ஓடிவந்த கர்ணன் திரைப்படம் அடுத்த நாளே 50 சதவீத பார்வையாளர்களுடன் ஓட வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இதன் காரணமாக படத்திற்கு ஏகப்பட்ட நஷ்டம் வரும் என பேசிக் கொண்டிருக்கின்றனர்.
இந்த நேரத்தில்தான் வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவது போல கர்ணன் படத்தை எச்டி தரத்தில் வெளியிட்டுள்ளது தமிழ் ராக்கர்ஸ் நிறுவனம். இதை சற்றும் எதிர்பாராத தயாரிப்பாளர் கடும் அதிர்ச்சியில் உள்ளாராம். இதன் காரணமாக விரைவில் அமேசான் தளத்தில் கர்ணன் வெளியாகி விடும் என தெரிகிறது.
இதேபோல்தான் தளபதி விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படம் திரையரங்குகளில் வெளியாகி அடுத்த இரண்டு வாரத்தில் அமேசான் தளத்தில் நேரடியாக வெளியானது குறிப்பிடத்தக்கது.