இப்போது சினிமாவில் சுமாரான படங்களுக்குக் கூட மிகப் பெரிய விளம்பரம் செய்து முதல் மூன்று நாட்களில் அந்த படத்தின் பட்ஜெட்டை எடுத்தே ஆக வேண்டிய சூழ்நிலைக்கு தயாரிப்பாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
ஆனால் அப்போதெல்லாம் அப்படி கிடையாது. ஒரு படம் பல வருடங்கள் தியேட்டரில் ஓடிய வரலாறும் உண்டு. அதேபோல் ரிலீஸாகி முதல் வாரம் சரியாக போகாமல் பின்னாளில் மாபெரும் வெற்றி பெற்ற படங்களும் உண்டு. இவ்வளவு ஏன் பாலா இயக்கிய சேது படத்திற்குக்கூட அதுதான் நடந்தது.
அப்படி ஒரு சம்பவம் நவரச நாயகன் கார்த்திக் படத்திற்கும் நடந்துள்ளது. கார்த்திக் மற்றும் சுந்தர் சி கூட்டணியில் முதன்முதலில் உருவாகி எதிர்பார்ப்பே இல்லாமல் முதல் மூன்று நாட்கள் போட்ட காசு வருமா என விநியோகஸ்தர்களை எதிர்பார்க்க வைத்த திரைப்படம் உள்ளத்தை அள்ளித்தா.
உள்ளத்தை அள்ளித்தா படம் வெளியான போது முதல் மூன்று நாட்கள் தியேட்டருக்கு ஈ காக்கா கூட வரவில்லையாம். கண்டிப்பாக இந்த படம் படுதோல்வியை சந்திக்கும் என நினைத்த விநியோகஸ்தர் திருப்பூர் சுப்பிரமணியம் இந்த படத்தை எப்படி கரை சேர்க்கப் போகிறோம் என பயந்தாராம்.
முதல் மூன்று நாட்களில் படத்தின் கடனை எப்படி கட்டப் போகிறோம் என விழித்துக் கொண்டிருந்தாராம். ஆனால் அடுத்தடுத்த வாரங்களில் உள்ளத்தை அள்ளித்தா திரைப்படம் தமிழகமெங்கும் பிரம்மாண்ட வெற்றி பெற்று அவருக்கு ஆறரை சதவிகிதம் லாபத்தை ஈட்டிக் கொடுத்ததாம் அந்த படம்.
இந்த தகவலை திருப்பூர் சுப்பிரமணியம் சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். நான் கொஞ்சமும் எதிர்பார்க்காமல் வெற்றியடைந்த திரைப்படங்களில் உள்ளத்தை அள்ளித்தா படத்திற்கு மிகப் பெரிய இடமுண்டு எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.