Jigarthanda Double X Movie Review: தீபாவளி பண்டிகை நெருங்கிய நிலையில் இப்போது தியேட்டர்கள் களைக்கட்டி இருக்கிறது. அதில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் எஸ்.ஜே சூர்யா, ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகி இருக்கும் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் இன்று வெளியாகி உள்ளது. மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த இப்படத்தின் விரிவான விமர்சனத்தை இங்கு காண்போம்.
மிரட்டல் ரவுடியிடம் சிக்கிய அப்பாவி இயக்குனரின் கதைதான் இப்படத்தின் ஒன் லைன். ஜிகர்தண்டா முதல் பாகத்தின் கருவை தான் இயக்குனர் இப்போது வேறு வடிவத்தில் ரசிக்கும்படி கொடுத்திருக்கிறார். அதன்படி ஒரு குற்றத்தை செய்து விட்டு சிறையில் இருக்கும் எஸ் ஜே சூர்யாவுக்கு இரண்டு ஆஃபர்கள் வழங்கப்படுகிறது.
அதாவது மிகப்பெரும் ரௌடியாக இருக்கும் சீசர் என்கிற ராகவா லாரன்ஸை கொல்ல வேண்டும் என்ற டாஸ்க் அவருக்கு கொடுக்கப்படுகிறது. அப்படி செய்தால் விடுதலை செய்வதோடு மட்டுமல்லாமல் அவர் விரும்பிய போலீஸ் வேலையும் கிடைக்கும். சில அரசியல் தந்திரத்திற்கு பலியாடாக மாறும் எஸ் ஜே சூர்யா இதற்கு சம்மதித்து ஒரு இயக்குனராக லாரன்ஸ் முன் செல்கிறார்.
Also read: ஜிகிர்தண்டா டபுள் எக்ஸ் எப்படி இருக்கு? முதல் விமர்சனத்தை அவிழ்த்துவிட்ட தனுஷ்
ஹாலிவுட் நடிகர் மேல் இருக்கும் ஈர்ப்பு, முதல் கருப்பு ஹீரோவாக சினிமாவில் ஜெயிக்க வேண்டும் என்ற ஆசை லாரன்சுக்கு இருக்கிறது. அதை பயன்படுத்திக் கொள்ளும் எஸ் ஜே சூர்யா வந்த வேலையை முடித்தாரா, லாரன்சுக்கு உண்மை தெரிந்ததா என்பதை இயக்குனர் சுவாரஸ்யம் கலந்து கொடுத்திருக்கிறார்.
இதில் ராகவா லாரன்ஸ் ஒரு ரவுடியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். ரவுடியாக அதகளம் பண்ணுவதிலிருந்து ஹீரோ ஆசை வந்து அட்ராசிட்டி செய்வது வரை அனைத்திலும் அவர் வியக்க வைத்துள்ளார். அதேபோன்று எஸ் ஜே சூர்யா லாரன்ஸை பார்த்து உள்ளுக்குள் பயந்தாலும் வெளியில் கெத்தாக காட்டி மிரள வைத்திருக்கிறார்.
அதைத்தொடர்ந்து இவர்களின் காம்போவில் வரும் ஒவ்வொரு காட்சியும் வேற லெவலில் ரசிக்க வைத்திருக்கிறது. முதல் பாதி எந்த அளவுக்கு விறுவிறுப்பாக சென்றதோ அதேபோல் இரண்டாம் பாதி சில எமோஷனல் கலந்து நகர்கிறது. மேலும் சந்தோஷ் நாராயணனின் இசையும் திருவின் ஒளிப்பதிவும் படத்தை தூக்கி நிறுத்தி இருக்கிறது.
இதில் சில லாஜிக் மீறல்கள் இருந்தாலும் அதையெல்லாம் கடந்து மொத்த படமும் தீபாவளி சரவெடியாக கொண்டாட வைத்திருக்கிறிருக்கிறது. அந்த அளவுக்கு திரைக்கதையை கொடுத்திருக்கும் கார்த்திக் சுப்பராஜ் இதன் மூலம் சிறப்பான கம்பேக் கொடுத்திருக்கிறார். ஆக மொத்தத்தில் இந்த ஜிகர்தண்டா சுவையான பானமாக தித்திக்கிறது.
சினிமா பேட்டை ரேட்டிங்: 3.25/5