செகண்ட் இன்னிங்சை அமோகமாக தொடங்கிய கீர்த்தி சுரேஷ்.. குவியும் பட வாய்ப்புகள்

மலையாள திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது தமிழில் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் தமிழில் சிவகார்த்திகேயன், விஷால், விஜய் உள்ளிட்ட பல முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடித்துள்ளர்.

இவர் தெலுங்கில் நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படமான மகாநதி என்ற திரைப்படத்தில் நடித்தார். அவருக்கு நடிப்பு வராது என்று பலரும் கூறிய நிலையில் அந்தப் படம் வெளியான பிறகு அவருடைய அற்புதமான நடிப்பை பார்த்து பலரும் வியந்து பாராட்டினர்.

அதற்குப் பிறகு ஹீரோயினுக்கு முக்கியத்துவம் தரும் பல திரைப்படங்களில் கீர்த்தி சுரேஷ் நடித்து வந்தார். சமீபத்தில் சூப்பர் ஸ்டாருக்கு தங்கையாக இவர் நடித்த அண்ணாத்த திரைப்படம் பல கோடி வசூலை பெற்று அவருக்கு புகழைத் தேடித் தந்தது.

இதனால் சில காலங்கள் பட வாய்ப்புகள் குறைந்திருந்த கீர்த்தி சுரேஷிற்கு தற்போது மார்க்கெட் அதிகரித்துள்ளது. இயக்குனர் மாரி செல்வராஜ் மற்றும் நடிகர் உதயநிதி ஸ்டாலின் இணைய இருக்கும் ஒரு புதிய படத்தில் ஹீரோயினாக நடிப்பதற்கு கீர்த்தி சுரேஷின் கால்ஷீட் கேட்கப்பட்டுள்ளது.

இதுதவிர நடிகர் விஜய் தற்போது பீஸ்ட் படத்தில் நடித்து முடித்துள்ளார். இவரின் நடிப்பில் அடுத்ததாக உருவாக இருக்கும் திரைப்படம் தளபதி 66. இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக உருவாகிறது. இப்படத்தை இயக்குனர் வம்சி இயக்குகிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க படக்குழு கீர்த்தி சுரேஷை அணுகியுள்ளனர்.

கீர்த்தி சுரேஷ் ஏற்கனவே நடிகர் விஜய்யுடன் இணைந்து சர்க்கார், பைரவா போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். அந்த வரிசையில் இவர் தற்போது மீண்டும் நடிகர் விஜய்யுடன் இணைய உள்ளார். மேலும் இவர் இயக்குனர் செல்வ ராகவனுடன் இணைந்து சாணி காகிதம் என்ற திரைப்படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.