தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் மிகவும் பிரபலமான நாயகியாக வலம் வருபவர் தமன்னா. அதேபோல் கிரிக்கெட் அணியின் கேப்டனாக திகழ்பவர் தான் விராட்கோலி. இந்த இரு பிரபலமும் ஆன்லைன் ரம்மி விளையாட்டை அறிமுகப்படுத்திய விளம்பரத்தில் நடித்ததால்,
தற்போது அவர்களை கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து எழுந்து வருகிறது. ஏனென்றால் கொரோனா லாக்டவுன் காலகட்டத்தில் வீட்டிற்குள் முடங்கிக் கொண்டு இருக்கும் இளைஞர்கள் பலரும் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டிற்கு அடிமையாகிவிட்டனர்.
அதன் காரணமாக சமீபத்தில் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த சென்னையை சேர்ந்த நித்திஷ் குமார் என்ற கல்லூரி மாணவன் தற்கொலை செய்தது பெரும் பரபரப்பை கிளப்பியது. அதன் பின்பு தொடர்ந்து பலர் ஆன்லைன் ரம்மி விளையாட்டால் பல லட்ச ரூபாயை இழந்ததாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழத் தொடங்கியது.
அதுமட்டுமில்லாமல் கேரளாவை சேர்ந்த இளைஞர் ஒருவர் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ரூபாய் 25 லட்சத்தை இழந்து அதனால் மன உளைச்சலில் தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து கேரள உயர்நீதிமன்றத்தில் இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஒருவர் பொதுநல வழக்கு தொடுத்ததால்,
அதனை விசாரித்த நீதிபதி, இந்திய கிரிக்கெட் கேப்டன் விராட் கோலி, நடிகை தமன்னா மற்றும் பிரபல மலையாள நடிகர் அஜு வர்கீஸ் ஆகியோர் மட்டுமல்லாமல் கேரள அரசுக்கும் உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

எனவே தொடர்ந்து ஆன்லைன் ரம்மி விளையாட்டிற்கு பலியானோரின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருப்பதால், இந்த விளையாட்டை உடனடியாக தடை செய்து உத்தரவிட வேண்டும் என்பதே அனைவருடைய கோரிக்கையாகும்.