இப்போதெல்லாம் திரைப்படங்கள் வெறும் பொழுதுபோக்கு என்பதை தாண்டி மிகப்பெரிய வியாபார நோக்கத்திலேயே பார்க்கப்பட்டு வருகிறது. தாங்கள் போட்ட பணத்தை எப்படியாவது எடுத்துவிட வேண்டும் என தயாரிப்பாளர்களும், திரையரங்க உரிமையாளர்களும் நினைப்பதாலோ என்னவோ முன்னணி நடிகர்களின் படங்களின் முதல் நாள் காட்சிக்கு டிக்கெட் விலை தாறுமாறாக உயர்ந்து வருகிறது.
இதன் காரணமாகவே இயக்குனர்களும் நடிகர்களும் ஒருவருக்கொருவர் போட்டி போட்டுக்கொண்டு அவர்களின் படங்களை வெளியிட்டு வருகிறார்கள். இவர்களின் இந்த போட்டி காரணமாக பெரிய பட்ஜெட் படங்கள் மட்டுமே பிரபலமாகின்றன. இதற்கிடையில் சிறிய பட்ஜெட்டில் எடுக்கப்படும் படங்கள் சிறப்பாகவே இருந்தாலும், காணாமல் போய்விடுகின்றன.
அந்த வகையில் தற்போது இரண்டு பெரிய பட்ஜெட் படங்களுக்கு இடையே மோதல் உருவாக உள்ளது. அதன்படி, நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் பீஸ்ட் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படம் கிட்டத்தட்ட முடியும் நிலையில் உள்ளது.
இந்நிலையில் பீஸ்ட் அடுத்தாண்டு பொங்கலுக்கு வெளியாகும் என முன்னதாக கூறப்பட்டது. ஆனால் ஏற்கனவே பொங்கல் ரேசில் பல படங்கள் இருப்பதாலும், பீஸ்ட் படத்தின் இறுதிகட்ட பணிகள் முடிய தாமதமாகும் என்பதாலும் பீஸ்ட் படம் கோடை விடுமுறையில் வெளியாகும் என கூறப்பட்டது.
ஆனால் தற்போது முன்னதாகவே ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதி பீஸ்ட் படம் வெளியாக உள்ளதாம். இதில் புதிதாக ஒரு சிக்கல் உருவாகியுள்ளது. என்னவென்றால் அதே நாளில் தான் கன்னட நடிகர் யாஷ் நடிப்பில் உருவாகியுள்ள கேஜிஎப் -2 படமும் வெளியாக உள்ளதாம். இப்படம் இந்திய அளவில் மிகவும் பிரம்மாண்டமாக எதிர்பார்க்கப்பட்டு கொண்டிருக்கும் ஒரு படமாகும்.
இப்படத்தின் முதல் பாகமே மாபெரும் வெற்றி பெற்றது என்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான். இந்நிலையில் இரண்டாம் பாகம் வெளியாக உள்ளதால் பீஸ்ட் படத்திற்கு போதுமான திரையரங்குகள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி கேஜிஎப் படம் ஒரு பான் இந்தியா படம் என்பதால் பீஸ்ட் படத்திற்கு மிகப்பெரிய போட்டியாக உள்ளதாம். பொங்கலுக்கு விடலாம்னு பார்த்தா அங்க வலிமை படத்தை ரிலீஸ் செய்ய ஏற்கனவே தியேட்டரை புக் செய்து விட்டனர். இதனால் என்ன செய்வதென படக்குழுவினர் யோசித்து வருகிறார்கள்.