கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியாகி பட்டிதொட்டியெங்கும் பட்டையை கிளப்பிய கேஜிஎஃப் படத்தை அவ்வளவு எளிதில் யாரும் மறக்க முடியாது. முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து படத்தின் இரண்டாம் பாகத்தை எடுத்து முடித்துள்ளார் இயக்குனர் பிரசாந்த் நீல்.
ஹீரோவாக யாஷ், ஹீரோயினாக ஸ்ரீநிதி ஷெட்டி, இவர்களுடன் சஞ்சய் தத், பிரகாஷ் ராஜ், ரவீனா டாண்டன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ‘கேஜிஎஃப் 2’ படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, கேஜிஎஃப் 2 திரைப்படம் ஜூலை 16ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்திருந்தனர். ஆனால், கொரோனோ தொற்று பரவல் காரணமாகவும், தியேட்டர்கள் திறக்கப்படாததால் செப்டம்பர் மாதம் படம் வெளியாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில், ‘கேஜிஎஃப் 2’ படத்தின் 6 பாடல்கள் கொண்ட தென்னிந்திய ஆடியோ உரிமையை பிரபல லஹரி மியூசிக் நிறுவனம் 7 கோடியே 20 லட்சத்திற்கு வாங்கியுள்ளது. இதனை உறுதிப்படுத்தும் விதமாக ‘கேஜிஎஃப் 2’ தயாரிப்பாளர் விஜய் கிர்கண்டுவுடன் லஹரி மியூசிக் நிறுவனத்தினர் ஆடியோ உரிமைத்தை பெற்ற ஒப்பந்தத்துடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.
கன்னட படமான கேஜிஎஃப் படத்தின் வெற்றி ஒட்டுமொத்த திரை உலகையே திரும்பிப் பார்க்க வைத்தது. பாகுபலியை தொடர்ந்து கேஜிஎஃப் படத்தின் இரண்டாம் பாகத்திற்கு தான் பெரிய அளவிலான எதிர்பார்ப்புகள் உள்ளன. ரசிகர்களின் இந்த எதிர்பார்ப்பை கேஜிஎஃப் 2 பூர்த்தி செய்யுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.