கன்னடத்தில் முன்னணி நடிகராக இருப்பவர் சுதீப். இவர் தமிழ் ,தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழிகளிலும் நடித்து வருகிறார். நடிகர் சுதீப் நடிப்பது மட்டுமல்லாது பல சமூக சேவைகளையும் செய்து வருபவர். இதனால் இவருக்கு ரசிகர் பட்டாளம் ஏராளம்.
சுதீப் தன்னுடைய அறக்கட்டளை மூலமாக மாணவர்களுக்கும் ஏழை எளியவர்களுக்கும் பல உதவிகளை செய்து வருகிறார். தனது சொந்த ஊரில் 133 வருடங்கள் பழமையான அரசு பள்ளியை தத்தெடுத்து அதனை சீரமைத்து மாணவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளையும் செய்து கொடுத்துள்ளார்.
ரசிகர்களின் நெஞ்சில் குடியிருக்கும் சுதீப்பின் 50வது பிறந்த நாள் வெகு விமர்சையாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. அதில் ஒரு பிரச்சனையும் புதிதாக வந்துள்ளது.
பொதுவாக ரசிகர்கள் தங்களின் பிடித்த நடிகர்கள் அல்லது தலைவர்களின் பிறந்த நாளன்று பல நலத்திட்டங்களும், நடிகர்களுடன் கட்டவுட்டுக்கு பாலாபிஷேகம், கோவில்களில் சிறப்பு வழிபாடு என்று பலவாறு கொண்டாடுவார்கள் .
ஆனால் சற்று வித்தியாசமாக சுதீப்பின் பிறந்தநாள் அன்று பிறந்த நாள் கொண்டாட்டத்தில் ரசிகர்கள் எருமை மாட்டை பலி கொடுத்துள்ளனர். இந்த செயல் தற்போது ஒரு சர்ச்சையாக மாறியுள்ளது.
பல ரசிகர்கள் சுதீப்பின் கட்டவுட் வைத்து கேக் வெட்டி கொண்டாடினார்கள். ஒரு சில ரசிகர்கள் எருமை மாட்டை பலிகொடுத்து அதன் ரத்தத்தை கொண்டு சுதீப்பின் கட்டவுட்டிற்கு அபிஷேகம் செய்து உள்ளனர். இதனால் 25 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள். இவ்வாறு மற்ற விலங்குகளை பலி கொடுப்பதும் தவறு என்று பலர் சோசியல் மீடியாக்களில் பதிவிட்டு வருகிறார்கள்.