தந்தை, மகன் உறவு என்பது நட்புக்கு இணையான பந்தம். ஒருவரை ஒருவர் பரஸ்பரம் அன்பு பாராட்டுவது, எல்லாவற்றையும் பகிர்வது, குடும்ப பிரச்சினைகளில் ஆலோசிப்பது எனப் பலவற்றையும் இது உள்ளடக்கியது. அந்த வகையில் தந்தை மகனுக்கு இடையே ஆன பந்தத்தை அற்புதமாக காட்டிய திரைப்படங்களைப் பார்க்கலாம்.
இந்தியன்: இப்படத்தில் கமல் இரட்டை வேடத்தில் நடித்திருந்தார். சுதந்திரப் போராட்டத் தியாகியாக சேனாதிபதியும், அவரது மகன் சந்துருவாகும் கமல்ஹாசன் நடித்திருந்தார். ஆரம்பம் முதலே வர்மக்கலை மூலம் குற்றங்கள் செய்பவர்களால் கொலை செய்து வரும் இந்தியன் கடைசியில் அவர் மகன் சந்துருவையும் கொலை செய்கிறார். இப்படத்திற்காக கமலஹாசன் தேசிய விருது மட்டுமல்லாமல் சிறந்த நடிகருக்கான தமிழக அரசின் விருதையும் பெற்றார்.
தேவர் மகன்: இப்படத்தை சக்திவேல் ஆக கமலஹாசன் நடித்து இருந்தார். கமலஹாசனின் தந்தையாக பெரிய தேவர் கதாபாத்திரத்தில் சிவாஜி கணேசன் நடித்து இருந்தார். இதில் சிவாஜியின் கதாபாத்திரம் ரசிகர்களால் போற்றப்பட்டது. இப்படத்திற்காக சிவாஜிக்கு தேசிய விருதும் கிடைத்தது. தேவர்மகன் படம் ஆஸ்கர் பரிந்துரை செய்யப்பட்டிருந்தது.
தவமாய் தவமிருந்து: சேரன் இயக்கத்தில் உருவான இப்படத்தில் சேரனின் தந்தையாக ராஜ்கிரண் நடித்திருந்தார். பிள்ளைகளை பல சிரமங்களுக்கு இடையில் படிக்க வைக்கிறார் ராஜ்கிரண். காதல் திருமணம் செய்துகொள்ளும் சேரனை ஏற்றுக்கொள்கிறார். கடைசியில் இறக்கும் போதும் மகனுக்கு எந்தக் குறையும் வைக்கவில்லை என்பதை உறுதிப்படுத்தி விட்டு இறங்குகிறார். பெற்றோர்கள் பிள்ளைகளை வளர்க்க படும் துயரங்களை இப்படம் காட்டி இருந்தது.
எம்டன் மகன்: இப்படத்தில் தனியாளாக கஷ்டப்பட்டு ஒரு நல்ல நிலைக்கு வந்துள்ளார் நாசர். இவரின் மகனாக நடித்திருந்தார் பரத். தன் மகனின் மீது அக்கறை கொண்டு உள்ளுக்குள் பாசத்தை வைத்து வெளியில் கோபத்தை காட்டுகிறார். கடைசியில் தன் வளர்ச்சிக்காக தான் நாசர் கடுமையாக நடந்து கொண்டார் என்பதை எல்லோருக்கும் புரிய வைக்கிறார் பரத்.
வாரணம் ஆயிரம்: கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் வாரணம் ஆயிரம். இப்படத்தில் தந்தை, மகன் என சூர்யா இரட்டை வேடத்தில் நடித்திருந்தார். அப்பாவை ரோல் மாடலாக நினைக்கும் மகன். அவரது தந்தையின் காதல்தான் மகனுக்கு உத்வேகமாக இருக்கிறது. எல்லாவற்றையும் தந்தையுடன் பகிர முடியும் என்பதற்கான எடுத்துக் காட்டாக இப்படம் அமைந்தது.
சந்தோஷ் சுப்பிரமணியம்: குடும்பத்தின் நலனுக்காக தனி ஆளாக போராடி ஒரு நல்ல அந்தஸ்துக்கு வந்துள்ளார் பிரகாஷ்ராஜ். இவருடைய மகனாக நடித்திருந்தார் ஜெயம்ரவி. தந்தையின் அதீத அக்கறையால் மகன் இழந்த சந்தோஷங்களையும், படும் கஷ்டங்களையும் உணர்ந்து பிரகாஷ்ராஜ் கடைசியில் வானில் பறக்கும் பறவை போல மகனுக்கு தனி ஆளாக எல்லா முடிவுகளையும் எடுக்கும் உரிமைகயை கொடுக்கிறார்.
வரலாறு: அஜித் 3 வேடங்களில் நடித்து வெளியான திரைப்படம் வரலாறு. ஒரு தந்தை அவருக்கு இரண்டு மகன்கள் ஆக அஜித் நடித்து இருந்தார். தன் சாயல் கொஞ்சமும் மகனுக்கு வரக்கூடாது என பார்த்து பார்த்து நடந்து கொள்கிறார் தந்தை சிவசங்கர். தன் மகனை நோக்கி வரும் துப்பாக்கி குண்டை சிவசங்கர் குறுக்கிட்டு அவர் மேல் குண்டு பட்டு கொல்லப்படுகிறார். இப்படத்துக்காக அஜித்துக்கு பிலிம்ஃபேர் விருது கிடைத்தது.
முத்துக்கு முத்தாக: இப்படத்தில் ஐந்து மகன்களை பெற்றெடுக்கும் பெற்றோர்களாக இளவரசு, சரண்யா. அவர்களைத் பாசத்துடனும் அக்கறையுடனும் வளர்க்கிறார்கள். மகன்களுக்கு திருமணமாகி அவர்களின் மனைவியால் இன்னல்களுக்கு உள்ளாகும் பெற்றோர்கள் மகன்களில் சந்தோசத்திற்காக உயிரையும் விடுகிறார்கள்.