Vijayakanth – Vijay: கேப்டன் விஜயகாந்த் அவர்கள் தமிழக மக்களை மீள முடியாத துயரில் ஆழ்த்தி விட்டு விடை பெற்று இருக்கிறார். இவருடைய மறைவுக்கு பொதுமக்களும், சினிமா கலைஞர்களும் ஒன்று கூடி அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். படப்பிடிப்புகளில் பிசியாக இருக்கும் நடிகர்கள் கூட படபிடிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு பல பகுதிகளில் இருந்தும் சென்னையை நோக்கி விரைந்து வந்து கொண்டிருக்கிறார்கள்.
நடிகர் விஜய் தளபதி 68 படத்தின் படப்பிடிப்புக்காக தாய்லாந்து நாட்டில் இருப்பதாக சொல்லப்பட்டது. அப்படி இருந்தும் அவர் நேற்று நள்ளிரவு கோயம்பேடு தேமுதிக அலுவலகத்தில் வைத்திருந்த விஜயகாந்தின் பூத உடலுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தி இருந்தார். விஜய் பொதுவாக எந்த ஒரு உணர்வுகளையும் வெளியில் காட்டிக் கொள்ளாதவர். அப்படிப்பட்ட விஜய் விஜயகாந்தை பார்த்து அழுதது எல்லோருக்கும் கஷ்டமாக இருந்தது.
விஜய் மற்றும் விஜயகாந்த் இருவருக்கும் இடையேயான உறவு என்பது செந்தூரப்பாண்டி படத்திற்கு முன்பே உள்ளது. இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகருக்கு புரட்சி இயக்குனர் என்ற பெயர் வந்ததற்கு காரணமே புரட்சிக் கலைஞர் விஜயகாந்த் தான். இவர்கள் இருவரது கூட்டணியில் நிறைய படங்கள் சூப்பர் ஹிட் அடித்தது. சந்திரசேகரை ஒரு நல்ல இயக்குனராக மக்களுக்கு காட்டியது.
Also Read:சின்ன பின்னமாக உடைக்கப்பட்ட விஜயகாந்தின் சொத்து.. மனம் உருக கேப்டன் பேசிய வார்த்தைகள்
விஜய் உடைய அப்பா எஸ் ஏ சந்திரசேகர் தன்னுடைய மகனை எப்படியாவது ஹீரோவாக்கி விட வேண்டும் என நினைத்தபோது அவருக்கு நெருக்கமாக இருந்த பலரும் அவருக்கு உதவவில்லை. ஆனால் விஜயகாந்த்திடம் விஜய்யுடன் ஒரு படம் நடித்துக் கொடுக்க வேண்டும் என்று சொன்னபோது சம்பளமே வாங்காமல் அந்தப் படத்தில் அவர் நடித்துக் கொடுத்தார்.
கோஷமிட்ட விஜயகாந்த் விசுவாசிகள்
நள்ளிரவு விஜய் அஞ்சலி செலுத்த வந்தபோது விஜயகாந்தின் விசுவாசிகள் நன்றி கெட்டவனே வெளியே போ என ஆக்ரோஷமாக கோஷமிட்டார்கள். இதில் ஆச்சரியப்படுவதற்கு என்று எதுவுமே இல்லை. தன்னை ஏணியாக தூக்கிவிட்ட விஜயகாந்த் உயிரோடு இருந்த காலத்தில் விஜய் அவரை திரும்பி கூட பார்க்கவே இல்லை. அதனால் தான் அவருடைய விசுவாசிகள் இந்த அளவுக்கு கோவத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.
ஒரு மனிதன் உயிருடன் இருக்கும் பொழுது அவரைக் கண்டு கொள்ளாமல், இறந்த பிறகு கண்ணீர் வடித்து எந்த பயனுமே இல்லை. உண்மையிலேயே கேப்டன் சுயநினைவோடு இருக்கும் பொழுது விஜய் ஒரு நாள் போய் நேரில் பார்த்திருந்தால் கூட அவர் ரொம்பவும் சந்தோஷப்பட்டு இருப்பார். இது விஜய்க்கு மட்டும் ஒரு பாடமில்லை, சாமானிய மனிதர்கள் கூட ஒருவர் உயிரோடு இருக்கும்போது அவரை மதிக்க கற்றுக் கொள்ள வேண்டும்.