தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் தான் இயக்குனர் வெற்றிமாறன். இவர் வித்தியாசமான கதைகளை உருவாக்கி, இயக்கி, அதில் வெற்றி பெறுவதில் கைதேர்ந்தவர் என்றே கூறலாம்.
வெற்றிமாறன் காமெடி நடிகரான சூரியை வைத்து புதியதாக படமொன்றை இயக்க உள்ளார் என்ற தகவல் நாம் அறிந்தது தான். அதேபோல், இந்தப் படத்தை எல்ரெட் குமார் தயாரிப்பில், இசைஞானி இளையராஜா இசையமைக்க உள்ளார் என்ற தகவலும் ஏற்கனவே வெளிவந்தன.
இந்த நிலையில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. வெற்றிமாறன் இயக்கவிருக்கும் இந்தப்படத்தில் பாரதிராஜா மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருந்தார்.
மேலும் சில சூழ்நிலை காரணங்களால் இப்படத்திலிருந்து பாரதிராஜா விலக, தமிழ் சினிமாவின் வில்லன் நாயகனான கிஷோர் இந்த படத்தில் பாரதிராஜாவிற்கு பதிலாக நடிக்கவிருக்கிறார் என்ற தகவலும் பரவியது.
ஆனால் தற்போது இந்தப் படத்தில் விஜய் சேதுபதி பாரதிராஜா நடிக்கவிருந்த வயதான கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளாராம். மேலும் வயதான கதாப்பாத்திரத்திற்கான லுக் டெஸ்ட் விஜய்சேதுபதிக்கு எடுக்கப்பட்டதாம்.
ஏற்கனவே ‘வடசென்னை’ படத்தில் வெற்றிமாறன்- விஜய்சேதுபதி கூட்டணி அமைக்கப்பட்டதும், சில காரணங்களால் விஜய்சேதுபதி அப்படத்திலிருந்து விலகியதும் குறிப்பிடத்தக்கது.
