டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் முத்திரைகளை பதித்த ஜாம்பவான்கள் எல்லாம் 20 ஓவர் போட்டியில் சோபிக்காமல் போயுள்ளனர். அதற்கு முழு காரணம் அவர்கள் வயது மட்டும் தான். அவர்கள் தானாகவே முன்வந்து 20 ஓவர் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றுள்ளனர்.
20 ஓவர் போட்டி தற்போது நடைமுறையில் உள்ள ஒரு போட்டி ஆகும்.
ஹர்திக் பாண்டியா, ரிஷப் பண்ட், போன்ற வீரர்கள் ஆரம்பத்திலிருந்தே அதிரடி காட்டுவதால் அவர்களுக்கு இந்த வகையான போட்டிகளில் முன்னுரிமை கொடுக்கப்படுகிறது. மற்ற போட்டிகளில் சிறப்பாக விளையாடி ஒரே ஒரு 20 ஓவர் போட்டியில் மட்டுமே பங்கேற்ற முன்னணி கிரிக்கெட் வீரர்களை இதில் காண்போம்,
சச்சின் டெண்டுல்கர்: சச்சினை ரோல் மாடலாக வைத்து கிரிக்கெட் விளையாடியவர்கள் பலர். அவரைப் பார்த்து தான் சிறு வயதில் நாம் கிரிக்கெட் விளையாட ஆரம்பித்து இருப்போம். 200 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 463 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய சச்சின் டெண்டுல்கர் ஒரே ஒரு இருபது-20 போட்டியில் மட்டும் தான் விளையாடியுள்ளார். அது இந்தியாவின் முதல் 20 ஓவர் போட்டியாகும். அதில் வெறும் 10 ரன்களுக்கு அவுட் ஆகி வெளியேறியுள்ளார்.
இன்சமாம் உல்ஹக்: பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் இன்சமாம் உல் ஹக். அந்த நாட்டு கிரிக்கெட் வட்டாரத்தில் ஒரு மரியாதைக்குரிய மனிதர். இவர் பாகிஸ்தான் அணிக்காக 378 ஒருநாள் போட்டிகளில் விளையாடி11,739 ரன்களை குவித்துள்ளார். 120 டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடி உள்ளார். 2006ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான ஒரே ஒரு 20 ஓவர் போட்டியில் மட்டும் களம் கண்டு 11 ரன்கள்அடித்துள்ளார்.
ராகுல் டிராவிட்: டெஸ்ட் போட்டிகளில் இந்தியாவின் சுவர் என வர்ணிக்கப்படும் டிராவிட் ஒரு சிறப்பான தடுப்பாட்ட வீரர். இவர் 2012 ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான ஒரு 20 ஓவர் போட்டியில் விளையாடி 3 சிக்சர்களுடன் 32 ரன்களை அடித்துள்ளார். இதுவே இவருக்கு முதலாவது 20 ஓவர் போட்டி. துரதிஷ்டமாக அதுவே கடைசி போட்டியாகவும் மாறியது .
ஜேசன் கில்லஸ்பி: ஆஸ்திரேலிய அணியின் ஒரு சிறந்த வேகப்பந்து வீச்சாளர் இவர். டெஸ்ட் போட்டிகளில் ஒரு இரட்டை சதம் அடித்துள்ளார். ஒருநாள் போட்டிகளில் 142 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இவர் 2005ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான ஒரே ஒரு 20 ஓவர் போட்டியில் மட்டுமே விளையாடி உள்ளார். அதில் 18 பந்துகளை சந்தித்து 24 ரன்களை விளாசியுள்ளார்.
முகமது ரபிக்: பங்களாதேஷ் நாட்டைச் சேர்ந்த இடது கை சுழற்பந்து வீச்சாளர் இவர். இவரும் தன் அணிக்காக ஒரே ஒரு 20 ஓவர் போட்டியில் மட்டுமே விளையாடியுள்ளார். 2006ஆம் ஆண்டு நடைபெற்ற ஜிம்பாப்வேக்கு எதிரான ஒரு 20 ஓவர் போட்டியில் 5 பந்துகளில் 13 ரன்கள் அடித்துள்ளார்.