சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

எம்.ஜி.ஆர், ஜெயலலிதா மாதிரி விஜய்யும் முதல்வர் ஆவாரா? திமுகவை எதிர்த்தால் என்னவாகும்.?

சில நேரங்களில் சினிமாவில் வருவது மாதிரி வாழ்க்கையிலும் நடக்கும். அது ஆச்சர்யமூட்டுவதாக இருக்கும். அந்த வகையில் சினிமாவில் அரசியல் வசனங்கள் மூலம் பரபரப்பை கிளப்பியவர் விஜய். அவர் படங்களுக்கு திமுக, அதிமுக ஆகிய திராவிட கட்சிகளின் ஆட்சியில் கட்டுப்பாடுகள் எழுந்தது உண்டு.

காவலன் பட ரிலீஸின் போதும், தலைவா பட ரிலீசின் போதும் விஜய் பல சிரமங்களை சந்திக்க நேர்ந்தது. அதையெல்லாம் தாண்டி விஜய் உச்ச நடிகராக ஜொலிக்கிறார். தமிழக வெற்றிக் கழகம் கட்சியை ஆரம்பித்து, முதல் மாநாட்டையும் பிரமாண்டமாக நடத்திக் காட்டினார்.

விஜய் படங்களைக் காட்டிலும் அவரது மாநாட்டில் பல லட்சம் பேர் திரண்டனர். அவர் மீது இளைஞர்களுக்கு நம்பிக்கை பிறந்துள்ளது என தவெக நிர்வாகிகள் பேசி வருகின்றனர்.

டிசம்பர் 6 ஆம் தேதி நடந்த எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர் புத்தக விழாவில் விஜயும் – திருமாவளவனும் பங்கேற்பதாக இருந்தது.

சில காரணங்களால் திருமாவளவனால் பங்கேற்க முடியவில்லை. இது கூட்டணி கட்சிகளின் அழுத்தம் தான் காரணம் என விஜய் அன்றைய மேடையில் பேசினார்.

முதல் மாநாட்டிலும், புத்தக வெளியீட்டு விழாவில் விஜய் திமுகவை நேரடியாக தாக்கிப் பேசினார். ஆளுங்கட்சியை குற்றம்சாட்டி வருகிறார்.

அதேபோல், விஜய்யையும், தவெக கட்சியையும் திமுகவினர் குறைசொல்லி வருகின்றனர். விஜய்யின் விமர்சனத்துக்கு கூட துணை முதல்வர் உதயநிதி, சினிமா செய்திகளை பார்ப்பதில்லை என்று கூறினார்.

எம்.ஜி.ஆர், ஜெயலலிதா போல் விஜயும் முதல்வர் ஆவாரா?

ஏற்கனவே திமுகவில் இருந்த கருத்து வேறுபாட்டால் விலகி, அதிமுக கட்சியை ஆரம்பித்த எம்.ஜி.ஆரை திமுகவினர் கடுமையாக விமர்சித்து, வசைபாடினர். அவர் 1977 முதல் 1987 ஆம் ஆண்டு இறக்கும் வரையில் 3 முறை தமிழ்நாட்டின் முதல்வராக இருந்தார்.

எம்.ஜி.ஆர் இறந்தபின், சில ஆண்டுகள் கழித்து அதிமுக பொதுச்செயலாளராக இருந்த ஜெயலலிதாவை திமுகவினர் விமர்சித்தனர். அவருக்கும் தமிழக முதல்வரானார்.

அதேபோல் தவெக தலைவர் விஜய்யை திமுகவினர் தாக்கிப் பேசி, விமர்சிக்கின்றனர். அவரும் முதல்வராக வாய்ப்புள்ளது என தவெக தொண்டர்களும் ரசிகர்களும் பேசி வருகின்றனர்.

எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் சினிமாவில் இருந்து வந்து அரசியலில் சிகரம் தொட்டவர்கள். விஜய்யும் அரசியலில் பல விமர்சனங்களை தாக்குப்பிடித்து, தேர்தலில் வெற்றி பெற்றால்தான் அவரும் முதல்வர் ஆக வாய்ப்புள்ளது என அரசியல் விமர்சகர்களும் கூறி வருகின்றனர்.

Trending News