அரசனாக இருந்தாலும் நேரம் சரியில்லை என்றால் ஆண்டி ஆகிவிடுவான் என்ற வாசகம் யாருக்கு பொருந்துகிறதோ, இல்லையோ. தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட இயக்குனர் லிங்குசாமிக்கு சரியாக பொருந்தும்.
ஆனந்தம், ரன், சண்டக்கோழி போன்ற தொடர் வெற்றி படங்களை கொடுத்து தமிழ் சினிமாவில் வெகுவேகமாக முன்னணி இயக்குனராக வளர்ந்த லிங்குசாமி அதன் பிறகு அவர் இயக்கிய பீமா படம் கொஞ்சம் சறுக்கியது. உடனே கார்த்திக்குடன் இணைந்து பையா என்ற வெற்றி படத்தை கொடுத்து மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்பினார்.
அதன் பிறகு வெளியான வேட்டை திரைப்படம் ஓகே என்கிற அளவுக்கு இருந்தது. அதன்பிறகு 2014ஆம் ஆண்டு தான் லிங்குசாமிக்கு சனி உச்சத்தில் இருந்தது தெரியவந்தது. கத்துகிட்ட மொத்த வித்தையும் சூர்யாவுடன் இணைந்து அஞ்சான் படத்தில் இறக்கினார். சூர்யாவும் சரி, லிங்குசாமியும் சரி அவர்களது கேரியரில் இதுவரை பார்க்காத தோல்வியை சந்தித்தார்கள். இப்போதும் டிவியில் வரவேற்பை பெறும் அஞ்சான் படம் ஏன் தியேட்டரில் ஓடவில்லை என்பது புரியாத புதிராகத்தான் உள்ளது.
அதன் பிறகு நான்கு வருடம் பட வாய்ப்புகள் இல்லாமல் தடுமாறி வந்த லிங்குசாமி இடையில் தயாரிப்பில் இறங்கி அதிலும் பல நஷ்டங்களை சந்தித்தார். கடைசியாக தமிழில் அவர் இயக்கிய சண்டக்கோழி 2 படமும் எதிர்பார்ப்பை சரியாக பூர்த்தி செய்யாததால் தோல்வியை தழுவியது. இதனால் தமிழில் நம்முடைய பருப்பு வேகாது என தற்போது தெலுங்கில் பிரபல நடிகராக இருக்கும் ராம் போத்தனி என்பவருடன் இணைந்து ஒரு புதிய படத்தை இயக்க உள்ளார்.
மேலும் இந்த படத்திற்கு இசையமைப்பாளராக தேவிஸ்ரீ பிரசாத் தான் வேண்டும் என அடம் பிடித்துக் கொண்டிருக்கிறாராம் லிங்குசாமி. தமிழில் அப்படி இப்படி இருந்தாலும் தெலுங்கில் தற்போது வரை முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் தேவிஸ்ரீ பிரசாத் இந்த படத்தில் இணைந்தால் கண்டிப்பாக படம் பிளாக்பஸ்டர் ஆகிவிடும் என தயாரிப்பாளர் மண்டையை கழுவி ஓகே செய்திருக்கிறாராம் லிங்குசாமி.
இதனைக் கேள்விப்பட்ட ரசிகர்கள், கண்ணாடியை திருப்புனா எப்படி ஆட்டோ ஓடும் என கலாய்த்து வருகின்றனர். தள்ளி கொண்டாவது போய் விடுவேன் என ஹிட் கொடுப்பதில் உறுதியாக இருக்கிறாராம் லிங்குசாமி.