கடந்த சில நாட்களாக எங்கு திரும்பினாலும் விக்ரம் திரைப்படத்தின் டிரைலரை பற்றிய பேச்சு தான் அதிகமாக இருக்கிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள விக்ரம் திரைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
விஜய் சேதுபதி, பகத் பாசில், காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இந்த திரைப்படத்தில் நடித்துள்ளனர். பல மாதங்களாகவே கமலின் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வந்த இந்த படத்தின் டிரைலர் கடந்த வாரம் பிரம்மாண்டமாக வெளியானது.
அதில் இடம்பெற்றிருந்த ஒவ்வொரு காட்சியும் ரசிகர்கள் பிரம்மிக்கும் வகையில் இருந்தது. அதிலும் ஒரு இடத்தில் கமல் மிகவும் ஆக்ரோசமாக .. த்தா பார்த்துக்கலாம் என்ற ஒரு கெட்ட வார்த்தையை பயன்படுத்தி இருப்பார். இதை முதலில் பார்க்கும் போது பலருக்கு அதிர்ச்சியாக இருந்தது.
ஒரு சிலருக்கு லோகேஷ் கனகராஜ், கமலையே கெட்ட வார்த்தை பேச வைத்து விட்டாரே என்று ஆச்சரியமாகவும் இருந்தது. ஆனால் இந்த வார்த்தை அதில் எப்படி இடம்பெற்றது என்பது குறித்து லோகேஷ் கனகராஜ் சுவாரஸ்யமான ஒரு விஷயத்தை கூறி இருக்கிறார்.
அவர் கூறியிருப்பதாவது, கதைப்படி முதலில் ஸ்கிரிப்டில் இந்த வார்த்தை இல்லை, வேறு தான் இருந்தது. சூட்டிங் எடுத்த சமயத்தில் நன்றாக மழை பெய்து கொண்டிருந்தது. எப்போதும் இதுபோன்று ஏதாவது நடந்தால் அதற்கு வேறு மாற்று வழி வைத்திருப்போம்.
ஆனால் அன்று எங்களுக்கு வேறு வழி எதுவுமில்லை. ஷூட்டிங் நடத்தியே ஆக வேண்டிய கட்டாயம் இருந்தது. அதனால் உதவி இயக்குனர் என்னிடம் வந்து என்ன பண்ணலாம் என்று கேட்டார். அப்போது நான் எதார்த்தமாக விடுடா பாத்துக்கலாம் என்று கூறினேன்.
அதன் பிறகு இதுவே நன்றாக இருக்கிறது இப்படியே படத்தில் வைத்தால் என்ன என்று தோன்றியதால் கமல் சாரிடம் இது பற்றி கேட்டேன். அவரும் அதற்கு சம்மதம் தெரிவித்தார். மேலும் நான் கமல் சாரின் தீவிர ரசிகன் என்பதால் அவர் விருமாண்டி, மைக்கேல் மதன காமராஜன் போன்ற கேரக்டர்களில் இருந்தால் இந்த வார்த்தையை எப்படி கூறுவார் என்று கேட்டேன்.
அவரும் நான் கேட்டதற்காக பல விதங்களில் பேசி காட்டினார். அதன்பிறகுதான் அந்த குறிப்பிட்ட காட்சியில் அந்த வார்த்தை இடம்பெற்றது என்று லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார். இதன் மூலம் ரசிகர்கள் பலருக்கும் இருந்த ஒரு கேள்விக்கு விடை கிடைத்துள்ளது.