தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களாக வலம் வருபவர்கள் தான் இயக்குனர் மணிரத்னம் மற்றும் ஷங்கர். தற்போது இயக்குனர் மணிரத்னம் பொன்னியின் செல்வன் என்ற பிரம்மாண்ட படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் தமிழ் சினிமாவின் பல முன்னணி நடிகர்கள் நடித்து வருகின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.
இதேபோல் இயக்குனர் ஷங்கரும் தற்போது தெலுங்கு நடிகர் ராம் சரண் நடிக்கும் புதிய படத்தை இயக்கி வருகிறார். இதனையடுத்து ஷங்கர் மற்றும் விக்ரம் கூட்டணியில் உருவாகி மாபெரும் வெற்றி பெற்ற அந்நியன் படத்தின் ஹிந்தி ரீமேக்கை எடுக்க உள்ளார்.
இந்நிலையில் இயக்குனர் மணிரத்னமும், ஷங்கரும் இணைந்து புதிதாக தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கியுள்ளனர். இந்த நிறுவனத்திற்கு Rain On Films என பெயர் வைத்துள்ளனர். இந்நிறுவனத்தின் மூலம் படங்கள், ஓடிடி தளங்களுக்கான தொடர்கள், நிகழ்ச்சிகளைத் தயாரிக்க உள்ளனர்.
இவர்கள் இருவர் மட்டும் அல்லாமல் இவர்களுடன் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களான மிஷ்கின், ஏ.ஆர்.முருகதாஸ், வெற்றிமாறன், கவுதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட 11 இயக்குனர்கள் இணைந்துள்ளனர்.
இந்நிலையில் இவர்கள் தயாரிக்கும் முதல் படத்தை, இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்க இருக்கிறார். தற்போது லோகேஷ் நடிகர் கமல் நடித்து வரும் விக்ரம் படத்தை இயக்கி வருகிறார். எனவே இப்படத்தை முடித்த பின்னர் இயக்குனர் மணிரத்னம் மற்றும் சங்கர் தயாரிக்கும் படத்தை தொடங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
சங்கர், மணிரத்னம், லோகேஷ் கனகராஜ், ஏ.ஆர்.முருகதாஸ், மிஷ்கின் என அனைத்து இயக்குனர்களுமே முன்னணி இயக்குனர்கள் என்பதால் இவர்களின் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாகி வருகிறது. தற்போது இவர்கள் தொடங்கியுள்ள தயாரிப்பு நிறுவனம் மூலம் மேலும் நிறைய தரமான படங்கள் உருவாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.