பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் மற்றும் உலக நாயகன் கமல் கூட்டணியில் இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கும் முயற்சியில் பல பிரச்சனைகள் உருவாகவே, சங்கர் இப்படத்தை பாதியில் விட்டுவிட்டு அடுத்த படத்திற்கான வேலையில் இறங்கினார்.
இதனால் கடுப்பான லைகா நிறுவனம் சங்கருக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததும், இது சம்பந்தமாக மத்தியஸ்தர் ஒருவரை சென்னை உயர்நீதிமன்றம் சமீபத்தில் நியமனம் செய்து அவருடைய அறிக்கையின் அடிப்படையில் தீர்ப்பு அளிக்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்ததும் நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான்.
ஆனால் இந்தியன் 2 படம் முடியும் வரை மற்ற படங்களை சங்கர் இயக்க தடை கேட்டு லைகா நிறுவனம் தொடர்ந்த அனைத்து வழக்குகளும் தள்ளுபடி செய்யபபட்டன. இதை எதிர்த்து தற்போது சங்கருக்கு எதிராக லைகா நிறுவனம் மேல் முறையீடு செய்துள்ளது. இதுதவிர ஹைதராபாத் மற்றும் மும்பை ஆகிய நகரங்களிலும் வழக்கு தொடர உள்ளதாக கூறப்பட்டது.
இதனால் பயங்கர மன உளைச்சலில் இருந்த இயக்குனர் சங்கரை சமீபத்தில் இந்தியா வந்த லைகா நிறுவன அதிபர் சுபாஷ்கரன் சந்தித்து பேசியுள்ளார். அப்போது இருவரும் பேசி எல்லா பிரச்சினைகளையும் சுமூகமாக தீர்த்து கொள்ள முடிவு செய்தனர். ஆனால் தற்போது மீண்டும் இவர்களுக்குள் மோதல் உருவாகி விட்டதாம்.
அதாவது சங்கர் மற்றும் சுபாஷ்கரன் இருவரிடையே ஏற்பட்ட பேச்சுவார்த்தையின் போது மீதமுள்ள படத்தை எத்தனை நாட்களில் எவ்வளவு செலவில் எடுத்து கொடுப்பீர்கள் என்று எழுத்துப் பூர்வமாக எழுதிக் கொடுக்க வேண்டும் என லைகா நிறுவனம் சங்கருக்கு நிபந்தனை விதித்துள்ளது. ஆனால் ஷங்கர் அதற்கு மறுப்பு தெரிவித்து விட்டாரம். என்ன நடந்தாலும் பார்த்துக்கலாம் என ஷங்கர் முடிவு செய்து விட்டாராம். இதனால் இந்தியன் 2 பட விவகாரம் முடிவுக்கு வராமல் இழுத்து கொண்டே செல்கிறது.