மெல்லிசை மன்னர், இசைச் சக்கரவர்த்தி, இசை உலகின் ஜாம்பவான் என்று அழைக்கப்படுபவர் எம் எஸ் விஸ்வநாதன். இவர் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு இசை அமைத்த பெருமைக்குரியவர் மற்றும் தன்னுடைய இசையில் புதுமையை புகுத்தி இன்றளவும் நிலைத்து நிற்பவர்.
இவர் இசையின் மீது இருந்த ஆர்வத்தின் காரணமாக சிறு வயதிலேயே ஹார்மோனியம் வாசிக்கக் கற்றுக் கொண்டார். இதன் காரணமாக அவர் தன் 13-வது வயதில் முதல் மேடை நிகழ்ச்சியை வழங்கினார்.
பின்னர் அவர் 1940 இல் ஜூபிடர் பிக்சர்ஸ் நிறுவனத்தில் ஆபிஸ் பாயாக பணிபுரிந்தார். அப்போது அவருடைய மாத சம்பளம் மூன்று ரூபாய் ஆகும். பிறகு சிறு சிறு மேடை நாடகங்களில் பணிபுரிந்த இவருக்கு தமிழ் சினிமாவில் இசையமைப்பாளர் ஆகும் வாய்ப்பு கிடைத்தது.
எம்ஜிஆர் கதாநாயகனாக நடித்த ஜெனோவா திரைப்படத்தில் அவருக்கு முதல் வாய்ப்பு கிடைத்தது. எம்ஜிஆருக்கு, விஸ்வநாதனை ஜூபிடர் பிக்சர்ஸ் ல் பணியாற்றிய காலத்தில் இருந்தே தெரியும். அதனால் எம்ஜிஆர் எடுபிடி வேலை பார்த்த இவருக்கு இசையைப் பற்றி என்ன தெரியும் என்று எண்ணினார்.
அதன் காரணமாக அவர் இசையமைத்த பாடலை எம்ஜிஆர் கேட்க கூட விரும்பவில்லை. மேலும் இசையமைப்பாளரை மாற்றும்படி தயாரிப்பாளரிடம் எம்ஜிஆர் கோரிக்கை வைத்தார்.
இந்த சூழ்நிலையில் தயாரிப்பாளர் ஒரு முக்கிய முடிவை எடுத்தார் அதாவது எம் எஸ் விஸ்வநாதன் மீது தயாரிப்பாளர் அபார நம்பிக்கை வைத்திருந்தார். அதனால் ஹீரோவை மாற்றினாலும் மாற்றுவேன் இசையமைப்பாளரை மாற்ற மாட்டேன் என்று உறுதியாக இருந்தார்.
அவருடைய இந்த உறுதியை பார்த்து எம் ஜி ஆர், எம் எஸ் விஸ்வநாதன் இசையமைத்த பாடலை கேட்டார். பாடலைக் கேட்டு ஆச்சரியமடைந்த எம்ஜிஆர் உடனே எம் எஸ் விஸ்வநாதனை காண அவருடைய வீட்டிற்குச் சென்றார்.அங்கு எம் எஸ் விஸ்வநாதனை கட்டி அணைத்து தன்னுடைய பாராட்டை தெரிவித்தார்.
அதன்பிறகு எம்ஜிஆர் நடித்த பல படங்களுக்கு எம் எஸ் விஸ்வநாதன் இசை அமைத்தார். இவ்வாறு தன்னுடைய திறமையால் உயர்ந்து தமிழ் சினிமாவை 25 வருடங்களுக்கு மேலாக தன்னுடைய இசையால் கட்டிப் போட்டவர் மெல்லிசை மன்னர் விஸ்வநாதன்.