படம் வெளியாவதற்கு முதல் நாள் இரவு வரை பிரச்சனைகளை சந்தித்த மாநாடு படம் இறுதியில் ஒரு வழியாக அனைத்து பிரச்னைகளையும் முடித்து தியேட்டரில் வெளியாகி விட்டது. சிம்பு நடிப்பில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு வெளிவரும் படம் என்பதாலும் முதல் முறையாக வெங்கட் பிரபுவுடன் சிம்பு கூட்டணி அமைத்துள்ள படம் என்பதாலும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாகி இருந்தது.
டைம் லூப் அடிப்படையில் உருவாகி உள்ள மாநாடு படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா இல்லையா படம் குறித்து ரசிகர்கள் என்ன கூறியுள்ளார்கள் என்பதை நாம் பார்க்கலாம். படம் பல பிரச்சனைகளை சந்தித்தால் அதிகாலை சிறப்பு காட்சிகள் ரத்து செய்யப்பட்டு 8 மணிக்கு தான் முதல் காட்சியே தொடங்கப்பட்டது.
மாநாடு படத்தில் தமிழக முதல்வராக நடித்துள்ள எஸ்.ஏ.சந்திரசேகரால் பாதிக்கப்படும் சிலர், அவரை ஒரு மாநாட்டின் போது கொலை செய்ய திட்டமிடுகின்றனர். முதல்வரை கொலை செய்யும் அந்த ஒரு நாள், நாயகன் சிலம்பரசனுக்கு மீண்டும் மீண்டும் நடக்கிறது. அதில் இருந்து நாயகன் எப்படி தப்பித்தார்? என்பதே மாநாடு படத்தின் கதை.
படத்தில் சிலம்பரசன், TR, SJ சூர்யா, கல்யாணி ப்ரியதர்ஷன், S.A. சந்திரசேகர், பிரேம்ஜி உள்ளிட்ட அனைவரும் அவரவர் கேரக்டரை பக்காவாக செய்துள்ளனர். டைம் லூப் படம் என எதிர்பார்த்து செல்லும் ரசிகர்களுக்கு படத்தில் மிகப்பெரிய சர்ப்ரைஸ் உள்ளது. அதேபோல் யுவனின் பின்னணி இசை, சிம்புவின் என்ட்ரி பிஜிஎம் என அனைத்தும் சிறப்பாக உள்ளது.
ரசிகர்கள் மட்டுமல்லாமல் சிவகார்த்திகேயன், பிரேம்ஜி உள்ளிட்ட திரை பிரபலங்களும் படம் குறித்து டிவிட்டரில் பதிவு செய்துள்ளனர். பெரும்பாலான ரசிகர்கள் படம் வேற லெவலில் இருப்பதாகவே கருத்து தெரிவித்துள்ளனர். இன்னும் சிலரோ மங்காத்தா படத்தை போல மாஸாக இருப்பதாக கூறுகிறார்கள். எது எப்படியோ மாநாடு படம் நிச்சயம் சிம்புவிற்கு ஒரு திருப்புமுனையாக அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.